“ஜெய்பீம் ணா” என கூறிய கொலையாளி.. அருகே சென்ற ஆம்ஸ்ட்ராங்.. கொலை செய்யப்படுவதற்கு முன் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவதற்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றி பரபரப்பு தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்கு முன்பாக கொலையாளிகளில் ஒருவன் "ஜெய்பீம்ணா" என கூறியதால் ஆம்ஸ்ட்ராங் அருகே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட எட்டு பேர், சம்பவம் நடந்த அன்று இரவே கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Armstrong BSP Chennai

ஆம்ஸ்ட்ராங் கொலை: தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங், பெரம்பூர் செம்பியம் வேணுகோபால் தெருவில் உள்ள தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதனால் ஆம்ஸ்ட்ராங் கட்டுமான பணிகளை நேரில் பார்க்க அயனாவரத்தில் இருந்து வேணுகோபால் தெருவுக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு நெருக்கமான வீரமணி, பாலாஜி ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அங்கு இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த 6 பேர் கும்பல், சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை அவரின் ஆதரவாளர்கள் கண் முன்பே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது. இரவு 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய கும்பல், அங்கிருந்து விரைவாக தப்பிச்சென்றது.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட ஆதரவாளர்கள், உடனடியாக அவரை சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஒருசில நிமிடங்களில் ஆம்ஸ்ட்ராங் பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கொலைக்கு முன் நடந்தது என்ன?: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு முன்பாக என்ன நடந்தது என்ற தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. ஆம்ஸ்ட்ராங் கட்டி வரும் வீட்டுக்கு அருகே பிரபல உணவகம் ஒன்று உள்ளது. எனவே அப்பகுதியில் எப்போதுமே, உணவு டெலிவரி ஊழியர்கள் அதிகளவில் பைக்குகளில் நிற்பார்கள். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியே கொலையாளிகள், உணவு டெலிவரி ஊழியர்கள் போல உடை அணிந்து வந்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளனர்.

ஜெய்பீம் ணா: உணவு டெலிவரி ஊழியர்கள் அணியும் டிசர்ட் அணிந்து வந்த ஒருவர், ஆம்ஸ்ட்ராங்கை பார்த்து கையை உயர்த்தி "ஜெய்பீம்ணா" என கோஷம் போட்டுள்ளார். உடனே, ஆம்ஸ்ட்ராங் அவருக்கு அருகே சென்று பேச முயன்றுள்ளார். அப்போதுதான் மற்ற சிலர் அரிவாள்களுடன் ஓடி வந்து ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரவியது.

புரட்சி பாரதம் கட்சியின் வாயிலாக அரசியலுக்குள் நுழைந்த ஆம்ஸ்ட்ராங், 2007 ஆம் ஆண்டுக்குப் பின் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பயணித்து வந்தார். தன்னிடம் உதவி என வரும் நபர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வது என பல நன்மைகளை ஆம்ஸ்ட்ராங் செய்துள்ளார். பல சட்டக்கல்லூரி மாணவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ளார்.

Armstrong BSP Chennai
Armstrong BSP Chennai
Armstrong BSP Chennai

ஆம்ஸ்ட்ராங் - ஜெய்பீம்: ஆம்ஸ்ட்ராங் எப்போதும் சொல்வது "ஜெய்பீம்" முழக்கத்தைத்தான். ஆம்ஸ்ட்ராங் நேற்று அடக்கம் செய்யப்பட்ட சவப்பெட்டியிலும் "ஜெய்பீம்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அம்பேத்கரின் கொள்கை மீது தீவிர பற்றுக்கொண்ட ஆம்ஸ்ட்ராங்கிடம் இருந்து தான் பா. ரஞ்சித் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் மூலமாகவே பா.ரஞ்சித் தனது படங்களிலும், பேச்சிலும் "ஜெய்பீம்" என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறார்.

அந்த "ஜெய்பீம்" என்ற சமத்துவத்திற்கான அழைப்பு கோஷத்தைத்தான் கொலையாளிகளில் ஒருவன் ஆம்ஸ்ட்ராங்கை கொல்லப் பயன்படுத்தியுள்ளான். அந்த வாசகத்தால் தான் "நம்ம ஆள்" என நம்பி, முன்னெச்சரிக்கை இன்றி அவர்களை நெருங்கி உள்ளார் ஆம்ஸ்ட்ராங். கொலையாளி ஜெய்பீம் எனக் கூறியதாக, நேற்று பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கத்தின்போது சிலர் கூறியுள்ளனர்.

தமிழ்ப்பிரபா பதிவு: எழுத்தாளரும், திரைக்கதையாசிரியருமான தமிழ்ப்பிரபா ஆம்ஸ்ட்ராங் பற்றி ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "உன்னை சந்தித்துவிட்டு கிளம்பும்போது, "ம்மா.. இப்டியொரு சட்டை எனக்கு வாங்கிக் குடேம்மா" என்றாய். "உடம்பைக் குறைச்சுட்டு இதையே எடுத்துகோண்ணா" என்றதும், என் கன்னத்தைப் பிடித்து கிள்ளிச் சிரித்தாய். அந்த சிரிப்புடன்தான் அண்ணா உன்னை கடைசியாகப் பார்த்தது. நீ கேட்ட அந்த சட்டையைத்தான் உன் இறுதி ஊர்வலத்திற்கு போட்டு வந்தேன். அந்த சிரிப்போ, கிள்ளலோ இல்லாமல் மீளாஉறக்கத்தில் இருந்தாய் நீ. இனி அந்த சிரிப்பை எப்போது காண்பேன்.

பைக்கில் வந்த ஸ்விகி ட்ரஸ் போட்டவன் உன்னை தன்னிடம் வரவழைக்க "ஜெய்பீம்ணா" என சொன்னதும் அவனருகே நீ சென்றபோதுதான் அவன் கத்தியை எடுத்திருக்கிறான் என இரங்கல் கூட்டத்தில் யாரோ சொல்லி கேட்டபோதுதான் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எத்தனை நம்பிக்கையுடனும் பிரியத்துடனும் நீ அவனருகே சென்றிருப்பாய்.

அரண்: பண்பாட்டு ரீதியாக பௌத்தத்தையும் அரசியல் ரீதியாக அம்பேத்கரையும் பயின்று தலித்துகள் அறிவுரீதியாக மேலெழும்ப வேண்டுமென வடசென்னையில் தொடர் செயற்பாடுகளை நீ நிகழ்த்தினாய். ரௌடிகளாக பிம்பப்படுத்தப்பட்ட அடையாளங்களை வழக்கறிஞர்களாக மாற்றினாய். பிற மாவட்டங்களில் போல அல்லது சென்னையில் தலித்துகளின் மீது வன்முறை நிகழாமல், அவ்வாறே நிகழ்ந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு பெரும் அரணாக கருப்பர் நகரத்துக் களிறாய் இருந்தாய்.

எத்தனை பேரின் பிள்ளைகளை படிக்க வைத்தாய், பணியில் அமர்த்தினாய் அந்த நன்றியைத்தான் கண்ணீராக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட குடும்பம் குடும்பமாக வந்து உனக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்கள் என்பதை உன்னை ரௌடியாக கட்டப்பஞ்சாயத்து ஆளாக கட்டமைக்கும் வெறுப்பாளர்கள் அறிவார்களா?

ஒழுக்கம்: கொடூரமான கொலை, புதைப்பதற்கு நீதிமன்றம் காட்டிய அலைக்கழிப்பு, இறுதியில் அனுமதி மறுப்பு, அரசின் கள்ள மௌனம் என மேலும் மேலும் கொதிநிலை அடைந்து வன்முறையை நிகழ்த்துவதற்கு அத்தனை சாத்தியங்களும் உன்னைச் சுற்றி திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு இருந்த போதும் அதை யாரும் செய்யாமல் இருந்ததற்கு காரணம் நீ கற்றுக்கொடுத்த ஒழுக்கம்தான்.

இந்த மூன்று நாட்களும் மருத்துவமனையிலும், இறுதி ஊர்வலத்திலும் எந்த ஒரு வன்முறையும் நிகழாமல் நீ அடக்கம் செய்யப்பட்டாய். ஒரு தலைவன் தன் மக்களை எப்படி வழிநடத்தியிருக்கிறான் என இந்த மாநிலம் அறிந்து கொள்வதற்கு நீ உன் உயிரையே விலையாகக் கொடுத்திருக்கிறாய் அண்ணா.

"ஒரு கூட்டத்தோட தலைவன தூக்கிட்டா இனி எல்லோரும் சிதறிப்போயிடுவானுங்க. இப்போ செய்" என மெட்ராஸ் படத்தில் வில்லன் பேசும் வசனம் வரும். ஆனால் கூட்டம் நிச்சயம் சிதறாது. முன்பெப்போதும் விட தீவிரமாக ஒன்றிணையும் காலமும், தேவையும் உருவாகியிருப்பதாகவே பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+