புயல் நடுவில் புல்லாங்குழல் ஓர் அபூர்வம் அபூர்வங்களுள் ஒருவர் முதல்வர்.. வைரமுத்து வாழ்த்து
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். புயல் நடுவில்
புல்லாங்குழல் ஓர் அபூர்வம் அபூர்வங்களுள் ஒருவர் முதல்வர் என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 71வது பிறந்தநாள். இதையொட்டி, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள், வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
கோபாலபுரம் இல்லத்தில்... பின்னர், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று, கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தி, தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். பிறகு, சிஐடி நகர் இல்லத்துக்கு சென்று கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார். அவருக்கு ராசாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், வீடு திரும்பிய முதல்வர், காலை உணவை முடித்துவிட்டு, 9.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார்.
அறிவாலயத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு, 'திராவிட மாடல் நாயகர் வாழ்க பல்லாண்டு' என்ற வாசகங்களுடன் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டினார். அமைச்சர்கள், நிர்வாகிகள்: தொடர்ந்து, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக வந்து முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கூட்டணி கட்சி தலைவர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சிகளின் நிர்வாகிகளும் முதல்வருக்கு வாழ்த்து கூறினர். மமக தலைவர் ஜவாஹிருல்லாவை முதல்வர் கட்டியணைத்து வாழ்த்து கூறினார்.
கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அதனை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சரைச் சந்தித்துப்
பிறந்தநாளுக்கு வாழ்த்தினேன்
சிறிதுநேரம்
தனிமையில் உரையாடினோம்
நிமிடமுள்ளின்
நிதானத்தில் பேசினார்
இடப் பங்கீட்டில்
அவரது கனிவும்
சூழ்நிலையின் கறார்த்தனமும்
தெளிவாய்த் தெரிந்தன
புயல் நடுவில்
புல்லாங்குழல்
ஓர் அபூர்வம்
அபூர்வங்களுள் ஒருவர்
முதல்வர்
என்று பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.












Click it and Unblock the Notifications