வட போச்சே.. புலம்பும் கருணாஸ்.. அலேக்கா முக்குலத்தோர் வாக்குகளை தட்டித் தூக்கிய 'பலே' திமுக!
சென்னை: திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை, அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
இதில், காங்கிரஸ் கட்சிக்கு 25, வி.சி.க, ம.தி.முக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், தமிழர் வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவைக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன.

உதயசூரியன் சின்னம்
இந்நிலையில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் - அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசியச் செயலாளர் ஜி.தேவராஜனும், இன்று (மார்ச்.3) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, தமிழகத்தில் 1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

பாஸ்கர் பாண்டியன்
இந்த பேச்சு வார்த்தையின்போது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசியக்குழு துணைத் தலைவர் பி.வி.கதிரவன், மத்திய ஐவர் குழு உறுப்பினர் சி.முத்துராமலிங்கம், மத்தியக்குழு உறுப்பினர் எம்.கர்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

பொதுச்செயலாளர் துரைமுருகன்
அதேபோல், திமுக சார்பில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.

முக்குலத்தோர் வாக்குகள்
முன்னதாக, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ், திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து, சீட் கேட்டிருந்த நிலையில், திமுக அவர்களை பேச்சுவார்த்தைக்கே அழைக்காததால், திமுக ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில், முக்குலத்தோர் வாக்குகள் கொண்டிருக்கும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது திமுக.












Click it and Unblock the Notifications