வரி கட்டாமல் ஏமாற்றிய இவரா தூய சக்தி.. விஜய்க்கு கேள்வி எழுப்பும் ஒன்இந்தியா தமிழ் வாசகர்
சென்னை: புலி திரைப்படத்திற்கு வருமான வரியை கட்டாமல் ஏமாற்றிய விஜய்யா தூய சக்தி என ஒன் இந்தியா தமிழ் வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். இதெல்லாம் காலக்கொடுமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'புலி' திரைப்படத்தில் நடித்ததற்காகப் பெற்ற ஊதியத்தில் ரூ.15 கோடியைக் கணக்கு காட்டாமல் விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியது. 2015-ஆம் ஆண்டு, விஜய்யின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதார ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆவணங்களின் அடிப்படையில், ரூ.15 கோடி வரி ஏய்ப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வருமான வரித்துறை அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதம் விதிக்கப்பட்ட காலவரம்பு குறித்து கேள்வி எழுப்பி, விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
"வருமான வரித்துறை தமக்கான அபராதத்தை 2019-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்னர் விதித்திருக்க வேண்டும்; 3 ஆண்டுகள் தாமதமாக 2022-ஆம் ஆண்டில் ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது தவறு" என்று விஜய் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், வருமான வரித்துறை அபராதம் விதித்ததற்கு எதிரான விஜய்யின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், அபராதம் காலவரம்பைக் கடந்தது என்ற அவரது வாதத்தையும் நிராகரித்தது.
வருமான வரித்துறை காலவரம்புக்குள்தான் ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ளது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. எனவே, காலவரம்பு குறித்த பிரச்னையைத் தவிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அவர் மேல்முறையீடு செய்யலாம் எனவும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் ஊழலுக்கு எதிரானவர் என விஜய் தன்னை தானே கூறி கொள்வது சரிதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை தவெக நடத்தியது.
அப்போது அந்த கூட்டத்தில் விஜய் பேசிய போது, "எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். நீட் ரத்து, கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்று திமுகவினர் அடித்து விட்டார்கள். இன்றுவரை ஏதாவது செய்தார்களா? இவர்கள் எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான்
24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிஷம் பேசினால் என்ன? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள். நாங்கள் வாயிலேயே வடை சுட திமுகவா... தவெக. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சொன்னது போல் திமுக ஒரு தீயசக்தி தீயசக்தி தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி; தீய சக்தி திமுகவிற்கும் தூய சக்தி தவெகவிற்கும் தான் போட்டி என விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து திமுகவை விமர்சித்து வந்த விஜய், திடீரென அதிமுகவையும் விமர்சித்தார். இதனால் விஜய்யின் சம்பளம் என்ன, பிளாக்கில் எவ்வளவு, ஒயிட்டில் எவ்வளவு வாங்குகிறார் என முன்னாள் அமைச்சர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தவெக ஆட்சிக்கு வந்து நான் முதல்வரானால் ஒரு ரூபாய் கூட லஞ்சமாக பெறமாட்டேன் என விஜய் பேசியிருந்த நிலையில் தற்போது தனது புலி படத்திற்கு ரூ 15 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த புகாரில் அபராதத்துடன் செலுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் விஜய் மீதான நேர்மை, நம்பகத்தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது. விஜய் குறித்த வருமான வரி ஏய்ப்பு வழக்கில் தீர்ப்பு தொடர்பான செய்திக்கு ஒன் இந்தியா தமிழ் வாசகர், "வருசத்துக்கு 5 லட்சம் சம்பாத்திக்கறவரிடமிருந்து வருமான வரி வசூலிக்கப்படுகிறது. ஒரு படத்துக்கு 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறவர் வரி ஏய்ப்பு செய்கிறார். இதுல இவர் 'தூய' சக்தியாம். காலக்கொடுமைடா !! என கண்டனம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
