ஆன்லைனில் பத்திரப்பதிவு.. இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் விற்க போறீங்களா.. தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை
சென்னை: இலவச வீட்டு மனை பட்டாக்களை விற்க முடியாமல் தவிப்பதாகவும், இதுகுறித்து வருவாய்த்துறைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை ஒன்று வலுத்து வருகிறது.
பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது... குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை.

பதிவுத்துறை: ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை.. அதேபோல, ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல, தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில், 1975 முதல் பதிவான பத்திரங்களை ஸ்கேன் செய்து, "ஸ்டார் 3.0" தொகுப்பில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.
மேலதிகாரிகள்: அதன்படி, மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பத்திரங்களை தங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் தொகுப்புடன் ஒப்பிட்டு சார் பதிவாளர்கள் சரி பார்க்க வேண்டும் என்றும், ஏதாவது பத்திரங்கள் விடுபட்டு இருந்தால், அது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து, மறுபடியும் ஸ்கேன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இப்படி பதிவுத்துறையில் ஆன்லைன் வசதிகள் பெருகிவரும் சூழலில், புதிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.
அதாவது, புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை, 2006ல் தமிழக அரசு அறிவித்திருந்தது.. இதையடுத்து, 10 வருடங்களுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, 3 சென்ட் இலவச மனைப்பட்டாக்கள் என மொத்தம் 4.37 லட்சம் பேருக்கு, பட்டாக்களையும் வழங்கப்பட்டன.
வெளியாட்கள்: அத்துடன், பட்டா பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தை, 10 வருடத்திற்கு வெளியாட்களுக்கு விற்பதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், 10 வருடம் முடிந்தும்கூட, நிலங்களை அதன் ஓனர்கள் விற்க முடிவதில்லையாம்.
மேனுவல் முறையில் வழங்கப்பட்ட இந்த மனை பட்டாக்கள், இன்னும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படாததால், இலவச மனை பட்டாக்களை பயன்படுத்த முடிவதில்லை என்றும், பட்டா விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வருவாய் துறைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications