ஓபன்ஏஐக்கு வேட்டு வைத்த இல்யா! வரப்போகுது சூப்பர் இன்டெலிஜென்ட்ஏஐ! புதிய யுத்தம்!
சென்னை: ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனர் இல்யா புதியதாகப் பாதுகாப்பான ஒரு சூப்பர் இன்டெலிஜென்ட் ஏஐ தொழில் நுப்டத்தை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக அவர் புதிய நிறுவனத்தைத் தொடங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகத்தையே புரட்டிப்போடக்கூடிய தொழில் நுட்பமாக இந்த நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்புதான் சாட்ஜிபிடி. அதன் மூளையாக இருந்த நிறுவனம்தான் ஓபன்ஏஐ. அது என்னய்யா? சாட்ஜிபிடி என்று அப்பாவித்தனமாக யாராவது கேள்வி கேட்டால், கட்டாயம் நீங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிப்பதாகத்தான் அர்த்தம். அந்தளவுக்குப் பட்டி தொட்டி எங்கும் இந்த சாட்ஜிபிடியில் வேலைசெய்யக் கூடிய இளைஞர்கள் வகைவகையாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்றால் கவிதை எழுதி அசத்த வேண்டும்? அப்படிக் கவிதை எழுதத் தெரியாதவர்கள் சில நண்பர்களிடம் போய் நாலு வரி மானே தேனே என்று எழுதிக் கொண்டு போய் கொடுப்பார்கள். இந்தத் தலைமுறைக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், சிந்தித்து நாலு வரி கவிதை எழுதும் அளவுக்கு எல்லாம் பொறுமை இல்லை. அதை எல்லாம் கண்டுபிடித்த ஓபன்ஏஐ நிறுவனம் இந்த சாட்ஜிபிடியை கண்டுபிடித்துக் கொடுத்தது.
கவிதை எழுதனுமா? உடனே எழுதித் தரும்? அல்லது சல்மான் ருஷ்டி போல நாவல் எழுதித் தர வேண்டுமா? உடனே அப்படியே ஆங்கிலத்தில் எழுதித் தரும். பல்கலைக்கழகத்திற்கு ஏதேனும் பிஹெச்டி ஆய்வேடு எழுத வேண்டும் என்றால் கூட எழுதி விடும். ஆக, இந்த சாட்ஜிபிடி போட்டோஷாப் தொழிலிருந்து போஸ்ட்மாடர்ன் ரைட்டிங் வரை அனைத்தையும் செய்து தரும். தமன்னா மாதிரி ஒரு நடிகையை உருவாக்க வேண்டும் என்றாலோ, அமிதாப்பச்சன் போல ஒரு ஆளை உருவாக்க வேண்டும் என்றாலோ அதையும் இந்த ஓபன் ஏஐ மூலம் செய்து விடலாம்.
ஆகவேதான் அந்தத் தொழில்நுட்பம் பல துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளை காலி செய்துவிடும் என்று அச்சம் நிலவியது. அதைப்போலவே பல நிறுவனங்கள் இந்த ஏஐ வசதியால் பணியாட்களைக் குறைத்து வருகின்றன. இந்தளவுக்கு உலகத்தையே புரட்டிப்போட்ட ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனர் தான் இந்த இல்யா சுட்ஸ்கேவர் (Ilya Sutskever). என்ன வாயிலேயே நுழையவில்லையா? வெளிநாட்டுக்காரர் பெயர் என்ன வெள்ளத்துரை என்றா இருக்கும்? இந்த உலக புகழ்பெற்ற ஏஐ ஆராய்ச்சியாளர் இப்போது அந்த நிறுவனத்தில் இல்லை.
வேலையை விட்டு வெளியேறி தனிக் கடை போட்டுவிட்டார். என்ன புரியவில்லையா? தனி கம்பெனி தொடங்கிவிட்டார். அவர் இப்போது செயற்கை நுண்ணறிவு என்பது பாதுகாப்பு அற்றது என்ற பேச்சு நிலவி வருகிறது இல்லையா? ஆகவே இவர் பாதுகாப்பான ஒரு புதிய ஏஐயை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் OpenAI லிருந்து வெளியேறிய இவர், அதன் இணை நிறுவனர்களான Daniel Gross, Daniel Levy ஆகிய இருவருடன் இணைந்து Safe Superintelligence உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த புதிய நிறுவனமானது, மனித நுண்ணறிவை மிஞ்சும் "அதிக நவீன நுண்ணறிவு"- கொண்ட AI என்று அவர் கூறியுள்ளார்.
இல்யா சுட்ஸ்கேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல விளக்கங்களையும் திட்டங்களையும் விளக்கியுள்ளார். இவருடன் Palo Alto, California, and Tel Aviv ஆகிய நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. இவர் புதியதாக ஒரு அதி நுண்ணறிவு (Superintelligence) உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளதால், ஏற்கெனவே இந்தத் துறையில் தாதாவாக வலம் வரும் ஓபன் ஏஐ உள்ளிட்ட சில நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஆகவே, மறைமுகமாக வணிக மோதலை உண்டாக்கியுள்ளது.
OpenAI இல், பாதுகாப்பான வசதிகளை வலுப்படுத்தும் குழுவை சட்ஸ்கேவர் இணைந்து வழிநடத்தி வந்தார். இவர் வெளியேறியதும், அந்த நிறுவனத்திற்கு இழப்புதான் எனச் சொல்லப்படுகிறது. எதற்காக அவர் வெளியேறினார் என்பதை இதுவரை வெளிப்படையாக இவர் அறிவிக்கவில்லை. அவர் வெளியேறிய பிறகு இந்த அதிநவீன நுண்ணறிவு பற்றிய பாதுகாப்பான அம்சங்கள் பற்றி சில விமர்சனங்களை இவர் முன்வைத்தார். அது சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில்தான் இவர் சூப்பர் இன்டெலிஜென்ட் ஏஐ தொழில்நுட்பம் ஒன்றைப் பாதுகாப்பு அம்சங்கள் நிரம்பியதாகக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதற்கான அறிவிப்பையும் கொடுத்துள்ளார். இவர் அறிவிப்பு வெளியான உடன் இவரது தளத்தை ஒரே நாளில் ஒரே நாளில் 3.6 கோடி இந்தியர்கள் பார்வையிட்டனர். எந்த ஒரு புதிய தொழில் நுட்பத்தையும் உடனே அறிந்து கொள்வதில் இந்தியர்களுக்கு உள்ள ஆர்வத்தின் அடையாளம்தான் இந்த எண்ணிக்கை.












Click it and Unblock the Notifications