என்னாது சசிகலாவை சந்திக்கிறாரா ஓபிஎஸ்?.. என்னாகுமோ! டென்ஷனில் எடப்பாடி பழனிசாமி.. குஷியில் திமுக!
சென்னை: நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் இன்னும் சில நாட்களில் நடைபெற போகிறது போல் தெரிகிறது. ஓபிஎஸ்ஸும் சசிகலாவும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் இரட்டை தலைமை இருந்து வந்த நிலையில் சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை என கூறி ஒற்றைத் தலைமை விவகாரத்தை நிர்வாகிகள் சிலர் எழுப்பினர். இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றால் மட்டுமே அதிமுக அடுத்தடுத்த தேர்தல்களில் வெல்லும் என கருதினர். இதற்காக ஜூலை 11 ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தார்கள்.
பஞ்சாயத்து: இதற்கு ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள் வந்தன. ஓபிஎஸ் ஜூலை 11 பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். அது போல் பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்தார். ஆயினும் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தது. அது போல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிமை கேட்டு சட்ட போராட்டம் நடத்தி தோல்வி அடைந்தார்.
தேர்தல் ஆணையம்: அது போல் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்று மொத்தமாக கட்சி எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டது. ஓபிஎஸ்ஸை தவிர்த்து வேறு யார் வேண்டுமானாலும் கட்சியில் மீண்டும் இணையலாம் என்பதில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருக்கிறார். இன்னும் அதிமுக வழக்கு நிலுவையில் உள்ளதால் என்றாவது வெற்றி கிடைக்கும் என ஓபிஎஸ் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
டிடிவி தினகரனுடன் சந்திப்பு: இந்த நிலையில் ஓபிஎஸ் அண்மையில் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவை தீயசக்திகளிடம் இருந்து மீட்க ஒன்றிணைவோம் என தெரிவித்தனர். அது போல் கடந்த வாரம் தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்து பேசினார். அது போல் அவர் சசிகலாவை சந்தித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைத்திலிங்கத்தின் மகன்: ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின் மகன் சண்முகபிரபுவின் திருமணம், தஞ்சாவூரில் ஓபிஎஸ் தலைமையில் வரும் ஜூன் 7ஆம் தேதி நடைபெறுகிறது. திருமணத்திற்கு ஏற்கெனவே அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் வைத்திலிங்கம். அது போல் சென்னை திநகரில் உள்ள சசிகலா இல்லத்திற்கு வந்து சசிகலாவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
சசிகலாவுக்கு அழைப்பு: இந்த சந்திப்புக்கு பின்னர் பேட்டி அளித்த வைத்திலிங்கம், மகன் திருமணத்திற்கு சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் அதை தவிர வேறு எதுவும் இல்லை என்றும் கூறியிருந்தார். திருமணத்தன்று ஓபிஎஸ் சசிகலா சந்திக்க வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். கடந்த மே மாதம் 8ஆம் தேதி டிடிவி தினகரனை டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.
டிடிவி தினகரனுடன் சந்திப்பு: அப்போது அதிமுகவை மீட்க டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார். இது நாள் வரை சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்கவில்லை. சசிகலாவுடனான சந்திபபு எப்போது என ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வரும்7ஆம் தேதி தஞ்சையில் நடக்கும் வைத்திலிங்கத்தின் மகன் திருமணத்தில் ஓபிஎஸ்ஸும் சசிகலாவும் சந்திப்பார்களா என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
