எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று.. அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மர்! கூடாரம் காலி!
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரும், மாநிலங்களவை எம்பியுமான தர்மர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவரது தலைமையை ஏற்று தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான நிலையில், ராஜ்ய சபா எம்.பி தர்மர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுள்ளார். இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத சூழலில், ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் களம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்ட சூழலில், இன்னும் தேமுதிக மற்றும் ராமதாஸ் அணிக்காக எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.

அதிமுக கூட்டணியின் டிடிவி தினகரனின் அமமுக இணைந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி என்னும் துரோகியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தொடங்கியவர் டிடிவி தினகரன். அவரும் ஓபிஎஸ்ஸும் இணைந்து பணியாற்றி வந்த சூழலில், திடீரென டிடிவி தினகரன் அண்ணன் என்று எடப்பாடி பழனிசாமியை அழைத்துவிட்டு கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார்.
இதனால் ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் கூட்டணி தொடர்பான முடிவை எடுக்க தடுமாறி வருகிறார் என்று கூறி மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுக பக்கம் சென்றுவிட்டனர். அதேபோல் ஜேசிடி பிரபாகர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துவிட்டனர்.
ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் அதிமுக பக்கம் செல்ல தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று மாலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இருக்கிறார்.
அதிமுக சார்பாக 2022ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் தர்மர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மர். முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்த அவருக்கு ஓபிஎஸ் ஆதரவு மூலமாக ராஜ்யசபா பதவி கிடைத்தது. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த தர்மர் திடீரென எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்திருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே முக்கலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன், அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டார். தற்போது ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த தர்மரும் விலகி உள்ளார். இதனால் ஓபிஎஸ் கூடாரம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இதனால் ஓபிஎஸ் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications