மாநாடு பட பாணியில் “ரிப்பீட்டு” எடப்பாடி,பன்னீர் மாறி மாறி நீக்கினார்களே!எல்லாமே இனி செல்லாது
சென்னை: அதிமுக பொதுக்குழு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளதன் மூலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாறி மாறி மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாமல் போயுள்ளது.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது.
அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று நிறைவேற்றப்பட்டு இருந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

ஒற்றைத் தலைமை
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

மாறி மாறி நீக்கம்
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

ஓபிஎஸ் வழக்கு
இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செலவம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஐகோர்ட் உத்தரவு
இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டு உள்ளது. அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய கூட்டம் செல்லாது என்று உத்தரவிட்டுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

ரிப்பீட் மோட்
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் மூலமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் அவரது மகன்கள், மூத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, புதிய நியமனங்கள் போன்றவை செல்லாமல் போயுள்ளது. அதேபோல் குறிப்பாக 11 ஆம் தேதிக்கு முன்புள்ள நிலை தொடரும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லாது என்பது தெரிகிறது.












Click it and Unblock the Notifications