எடப்பாடி வலையில் மாட்டிய மீன்கள்.. கடல் மாவட்டத்தில் ஒரே ‘ஜம்ப்’.. ஓபிஎஸ், தினகரனுக்கு செம ஷாக்!
சென்னை : நீதிமன்றங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைத்து, அதிமுகவின் பொதுச் செயலாளராக ஈபிஎஸ் பொறுப்பேற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் அணி மற்றும் அமமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவரது அணியில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் தொடர்ந்த வழக்குகளிலும் ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவே ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் மேல்முறையீடு செய்துள்ளனர். அடுத்தடுத்து நீதிமன்றங்களில் ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான உத்தரவுகளே கிடைத்ததால், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி மாநாட்டுக்கான பணிகளில் ஓபிஎஸ் அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுகவின் 51ஆவது ஆண்டின் துவக்க விழா என முப்பெரும் விழாவை ஓபிஎஸ் அணியினர் நடத்தவுள்ளனர். அதை முன்னிட்டு திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓபிஎஸ் அணியின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 10ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈபிஎஸ்ஸைச் சந்தித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் சண்முகபாண்டியன், கடலாடி தெற்கு ஒன்றியச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைத்துக்கொண்டுள்ளனர்.

அதேபோல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், பரமக்குடி தெற்கு நகரச் செயலாளர் உமாமகேஸ்வரன், போகலூர் ஒன்றியச் செயலாளர் ராஜாராம்பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் என மொத்தம் 50 பேர் இணைந்துள்ளனர். இது ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications