நீங்கதான் தைரியமான ஆளாச்சே! எடப்பாடி ஓகே சொன்னாலும்.. கூட்டணிக்கு தயங்கும் ஓபிஎஸ்! உள்ளடி வேலை பயம்!
சென்னை: தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வரவிருக்கும் சட்டசபை தேர்தல் பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை (என்.டி.ஏ) பலப்படுத்தும் முயற்சிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அந்த கூட்டணியில் இணைவதில் தயக்கம் காட்டுவதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் அதிக ஆதரவுடன் இருப்பதால், எடப்பாடி பழனிசாமி பேச்சைக் கேட்டு, சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக தரப்பினர் தன்னையும், தன் ஆதரவாளர்களையும் தோற்கடிக்கும் வகையில் உள்ளடி வேலைகளில் ஈடுபடலாம் என்ற அச்சமே அதற்கு காரணம் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ள, அதிமுக- பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி தலைமை உள்ளது.

தமிழக தேர்தல்
கடந்த மக்களவை தேர்தலில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ம.க., ஐ.ஜே.கே., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி இடம்பெற்றன. அதே சமயம், அதிமுக தனி அணியாக களமிறங்கி, தே.மு.தி.க.-வை தன்னுடன் இணைத்திருந்தது. தற்போது நிலைமை மாறியுள்ளது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க. மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன.
என்.டி.ஏ கூட்டணி
இதனைத் தொடர்ந்து, முன்னதாக என்.டி.ஏ கூட்டணியில் இருந்த கட்சிகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், "தே.ஜ. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை, கூட்டணியில் இணைய மாட்டேன்" எனத் தெளிவாக அறிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
இதனால், தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.-வில் இணைய மேற்கொண்ட முயற்சிகளும் இதுவரை பலனளிக்கவில்லை. இது தொடர்பாக பாஜக மேலிடம், எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டாலும், விதிக்கப்பட்ட நிபந்தனைகளால் அந்த முயற்சிகள் இழுபறியில் உள்ளன.
அதிமுக பாஜக கூட்டணி
இந்த சூழலில், என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் முக்கிய அரசியல் முடிவு எடுக்க இருப்பதாக தெரிவித்தார். இதற்காக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுடன் நடத்த திட்டமிட்டிருந்த ஆலோசனை கூட்டத்தை, வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தயக்கம்
மேலும், "தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியில் எந்த கட்சிகளை சேர்ப்பது என்பது குறித்து இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமியே எடுப்பார்" என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், பன்னீர்செல்வத்தின் தயக்கத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் கூறுகையில், " தமிழக கூட்டணிக்கு பழனிசாமி தலைமை வகிப்பதால், பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து, சில இடங்களையே ஓபிஎஸ், தினகரன் அணிக்கு வழங்குவர்.
உள்ளடி வேலை
அதிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருக்காது. ஓபிஎஸ் அல்லது தினகரன் தரப்பினர் போட்டியிடும் தொகுதிகளில், அ.தி.மு.க. தரப்பினர் உள்ளடி வேலை செய்து தோற்கடிக்கும் அபாயம் உள்ளது. இதனால் தான் இருவரும் தே.ஜ. கூட்டணியில் இணைவதில் தயக்கம் காட்டுகின்றனர்" என்று கூறினர்.
தமிழக வெற்றிக் கழகம்
இந்த நிலையில், அரசியல் குழப்பத்தில் உள்ள பன்னீர்செல்வமும் தினகரனும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அல்லது தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அந்தக் கட்சிகளிடமிருந்து இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications