"அதிமுக ஒருங்கிணைப்பாளர்" என குறிப்பிட்ட ஓபிஎஸ்.. மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு கடிதம்
தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி ஜூன் 23ஆம் தேதி காலாவதியாகிவிட்டது என்று சிவி சண்முகம், ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூறினாலும் தான் இன்னமும் ஒருங்கிணைப்பாளர்தான் என்று கூறி வருகிறார் ஓ.பன்னிர் செல்வம். மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், கடந்த 03-07-2022 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் இரண்டு மாத மீன்பிடித் தடைக்குப் பிறகு அவர்களின் பாரம்பரிய கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் அவர்களது படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
மீனவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுக்கும் இலங்கை கடற்படையின் நோக்கம் மிகவும் வெளிப்படையானது. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையில் உங்களது அன்பான தலையீட்டைக் கோர விரும்புவதுடன், 12 இந்திய மீனவர்களையும் அவர்களது இயந்திரப் படகுகளையும் இலங்கை அரசாங்கம் விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications