Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஓகே, ஆனால், ஏ ஃபார்ம், பி ஃபார்மில் யார் கையெழுத்து போட வேண்டும் என்பது பற்றி தேர்தல் ஆணையம் தெரிவிக்கவே இல்லை எனக் கூறி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி.

லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக, பாஜக தலைமையிலான கூட்டணிகள் தனித்தனியாக தேர்தலைச் சந்திக்கின்றன. அதிமுக சார்பில் 33 வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர். பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது ஓபிஎஸ் தரப்பு.

OPS supporter pugazhendhi sends petition to election commission regarding aiadmk symbol

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில், "தேர்தல் ஆணையம் அதிமுக ஏ மற்றும் பி படிவங்களில் யார் கையெழுத்து இடவேண்டும் என்பதை தேர்தல் நடத்தும் ஆணையாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனை முடிவு செய்யாமல் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒரு தரப்புக்கு வழங்கினால் தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைந்துவிடும். தவறான முறையில் குழப்பத்தில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது என்பது மிக தெளிவாகிவிடும்.

அதிமுக இரண்டு அணிகளாக செயல்படுவதை ஏற்றுக் கொண்டுள்ள தேர்தல் ஆணையம் யார் கையெழுத்திட வேண்டும் ‌என்பதை ஏன் முடிவு செய்யவில்லை? உயர் நீதிமன்றத்தில் என்னுடைய வழக்கில் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு புது மனுவை பெற்று பரிசீலித்து நடவடிக்கை எடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த நிமிடம் வரை எழுத்துப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகிய இருவரும் நடந்து முடிந்த தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தை பெறும் ஏ மற்றும் பி படிவங்களில் கையொப்பமிட்டுள்ளனர்.

இப்பொழுது அவர்கள் இரு அணிகளாக செயல்பட்டு வருவதால் யார் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அதிமுகவினுடைய சின்னம் இரட்டை இலை என்பது நடந்து முடிந்த தேர்தலின் போதும் இப்பொழுதும் நடைமுறையில் இருப்பது தான் இதில் மாற்றமில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் சின்னம இடம்பெறும் இடத்தில் அதிமுக பெயரை குறிப்பிட்டு இரட்டை இலை சின்னம் என இருப்பது வழக்கமான ஒன்றுதான் அதை வைத்துக்கொண்டு பழனிசாமி உரிமை கொண்டாட முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் யார் கையெழுத்து போட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தான் சொல்ல வேண்டும்.

அனைத்து கட்சிகளும் யார் கையெழுத்து போட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கின்ற நிலையில் இரண்டு அணிகளாக இருக்கும் அதிமுகவிற்கு யார் கையெழுத்து போட வேண்டும் என்பதை இதுவரை தேர்தல் ஆணையம் சொல்லாமல் ஒரு குழப்பத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலை நீடித்து சின்னத்தை ஒரு அணிக்கு தேர்தல் நடத்தும் ஆணையர்கள் குழப்பம் அடைந்து ஒதுக்குவார்களே ஆனால் சட்டத்திற்கு எதிரான ஒன்றாக அமைந்து விடும், நடைபெற உள்ள தேர்தலும் கேள்விக்குறியாகி விடும்.

ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இரட்டை இலை ஒதுக்க கூறியும் என்னுடைய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் இதுவரை எழுத்துப்பூர்வமாக எந்த பதிலையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். உடனடியாக தலையிட்டு இறுதியான முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதுவரை எந்த இடத்திலும் பொதுச் செயலாளர் என எவர் பெயரையும் தேர்தல் ஆணையம் குறிப்பிடவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் தேர்தல் ஆணைய பதிவுகளில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு பேரும் இடம்பெற்றுள்ளதை தேர்தல் ஆணையம் நன்கு அறியும்.

ஆகவே தான் இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என என்னுடைய சார்பில் டெல்லி உயர்நீதிமன்ற ஆணையுடன் புது மனுவையும் அளித்தேன். நேரமில்லாததால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் யார் என்பதை முடிவு செய்ய முடியவில்லை என்று சொன்னால் நியாயமாக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என மீண்டும் மின்னஞ்சல் மூலம் வா புகழேந்தி தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தமிழகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள மனு பற்றி புகழேந்தி கூறும் போது, "தேர்தல் ஆணையம் குழம்பி உள்ளது. இந்தியா முழுவதும் பல கட்சிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று முடிவை அறிவித்துள்ள நிலையில் ஏன் அதிமுகவிற்கு மட்டும் முடிவு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது புரியவில்லை. மக்கள், தொண்டர்கள் எண்ணத்திற்கு ஏற்ப தொடர் தோல்விகளை இரட்டை இலை சந்திக்கக்கூடாது என்கிற நோக்கத்தில் தான் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்பது எனது தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

இரட்டை இலை வெற்றிச் சின்னம் மூலம் சரித்திரம் படைத்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. அந்த சின்னத்திற்கு எடப்பாடி பழனிசாமி போல தோல்விகளை பரிசாக சமர்ப்பிக்க விரும்பவில்லை. தவறுதலாக தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பதை பயன்படுத்தி ஒரு அணியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மூலம் சின்னத்தை பெறுவார்களேயானால் சட்டரீதியாக அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். சட்டத்திற்கு எதிரான தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது என்பதை வழக்காடு மன்றத்தில் எடுத்து சென்று நிருபிக்க முடியும். நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சின்னம் கட்சிகளின் பட்டியலில் இருப்பது இயல்பான ஒன்று. அதிமுக என்ற கட்சிக்கு நிரந்தரமாக ஒதுக்கப்பட்ட சின்னம் இரட்டை இலை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கு யார் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் இதுவரை அறிவிக்கப்படவில்லை, தேர்தல் ஆணையத்தில் நடைமுறையில் இருப்பது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தான்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+