ஆளுநரை ஆபாசமாக திட்டிய பேச்சாளருக்கு மன்னிப்பு! மீண்டும் திமுகவில் இணைந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!
சென்னை: ஆளுநர் ரவி குறித்து ஆபாசமாக பேசியதால் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அக்கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
திமுக மேடைகளில் ஆளுநர் ரவி, அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் குறித்து வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி ஆபாசமாக திட்டியதால் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டிருந்தார் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
இதையடுத்து அவருக்கு திமுக பொதுக்கூட்டம் மேடைகளில் பேசுவதற்கு யாரும் வாய்ப்பு வழங்கவில்லை. அண்மையில் நடைபெற்ற திராவிட மாடல் அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளவும் வாய்ப்பு தரப்படவில்லை.

இதனால் வருமானத்தை இழந்து தவித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மீண்டும் தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு திமுக மேலிட பிரமுகர்களை அணுகத் தொடங்கினார்.
பார்க்கலாம் என நாட்களை நகர்த்திய அவர்கள், ஒரு வழியாக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு கேட்டதை எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
இதையடுத்து திமுக மேடைகளில் பேசும் போதும் கண்ணியம் காக்க வேண்டும் என்ற உறுதியை பெற்றுக்கொண்டும் மீண்டும் ஆபாசமாக பேசுவதை கைவிட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்றைய முரசொலியில் விடுத்துள்ள அறிவிப்பில், ''சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து தன்னை மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு கழகத் தலைவரிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்.'' இவ்வாறு துரைமுருகன் பெயரில் முரசொலியில் இன்று அறிவிப்பு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications