துரோகிகளை சேர்க்க சொல்வதற்கு நீ யார்? வரிந்து கட்டிய சிவி சண்முகம்.. தனித்து விடப்பட்ட செங்கோட்டையன்
சென்னை: எப்போ பார்த்தாலும் அதிமுக இரண்டாக பிரிந்துவிட்டது.. மூன்றாக பிரிந்துவிட்டது.. அது எத்தனையாக போனாலும் உனக்கு என்ன?.. எந்த கட்சி பதவி கொடுத்து அழகு பார்த்ததோ அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்த துரோகிகளை மீண்டும் கட்சியில் இணைக்க சொல்வதற்கு நீங்க யார்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நேற்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.
விழுப்புரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது:- எப்போ பார்த்தாலும் அதிமுக.. அதிமுக என்று தான் பேசுகிறார்கள். அதிமுக இரண்டாக போய்விட்டது.. மூன்றாக போய்விட்டது.. அது எத்தனையாக போனாலும் உனக்கு என்ன?.. அது எங்கள் பிரச்சினை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

காலால் எட்டி உதைத்தார்கள்
அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்.. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சொல்வது யார் என்று பார்த்தால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். கட்சிக்கு துரோகம் செய்ததற்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள். எந்த அதிமுக அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோ.. பதவி கொடுத்ததோ, அழகு பார்த்ததோ..
அந்த அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்த துரோகிகள். இந்த துரோகிகளை கட்சியில் இருந்து நீக்கினோம்.. அவர்களை மீண்டும் இணைக்க வேண்டுமா.. அவர்களை சேர்க்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்க யார்? அத நாங்கள் பார்த்துக்கொள்வோம்.. இவ்வாறு அவர் பேசினார்.
செங்கோட்டையன் விதித்த கெடு
அதிமுக முன்னாள் அமைச்சரும் கோபி செட்டி பாளையம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கடந்த 5 ஆம் தேதி மனம் திறந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் அதற்குள் இணைப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நானே அந்த முயற்சியை எடுப்பேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு நிற்காமல் டெல்லிக்கும் சென்ற செங்கோட்டையன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக கூறினார். இதற்கிடையில், டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
6 பேர் சந்தித்து பேசினர்
அதிமுக அலுவலகத்தை தாக்கியவர்களையும் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களையும் சேர்க்க முடியாது என்றும், அதிமுகவிற்கு துரோகம் செய்தால் நடுரோட்டில் தான் நிற்பார்கள் என்று பேசி, கட்சியில் இணைப்புக்கு சாத்தியம் இல்லை என்பதை திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருந்தார். இதற்கிடையே, லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அதிமுக மூத்த நிர்வாகிகள் 6 பேர் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சி ஒருங்கிணைப்பை வலியுறுத்தியதாக சொல்லப்பட்டது.
இதை செங்கோட்டையனும் தனது பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த ஆறு பேர் குழுவில் சிவி சண்முகம் இடம் பெற்று இருந்ததாக சொல்லப்பட்டது. அதேபோல, எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே சிவி சண்முகத்தின் நேற்றைய பேச்சு அமைந்துள்ளது.
இணைப்புக்கான சாத்தியம் இல்லை
னது வழக்கமான அதிரடி பேச்சின் மூலம் செங்கோட்டையனையும் மறைமுகமாக அட்டாக் செய்து இருக்கிறார் சிவி சண்முகம். இதன் மூலம் அதிமுகவில் இருந்து விலகியுள்ள சசிகலா, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைப்புக்கான சாத்தியம் இல்லை என்பதையே சிவி சண்முகத்தின் பேச்சு காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறும் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications