குவைத் தீ விபத்து.. 7 தமிழர்கள் உட்பட 45 பேர் பலி.. தமிழக வெற்றிக் கழகம் விஜய் இரங்கல்!
சென்னை: குவைத் தீ விபத்தில் 45க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியான செய்தியறிந்து மிகவும் கவலை அடைந்ததாகவும், விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டின் மங்காப் நகரில் இந்தியர்கள் பங்குதாரர்களாக உள்ள என்பிடிசி குழுமத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான இந்தியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். கேரளா, தமிழ்நாடு மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் இந்த குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகின்றனர். சுமார் 195 பேர் இந்த குடியிருப்பில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் தீப்பிடித்துள்ளது. அங்குள்ள சமையலறையில் பிடித்த தீ சிறிது நேரத்தில் மளமளவென பற்றி எரிந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்த குடியிருப்பில் கரும்புகை சூடியது. அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூக்கத்தில் இருந்தனர்.
இதனால் அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் அவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது பற்றி தெரிந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அறையில் இருந்து தப்ப முயற்சி செய்தனர். ஆனால் பலரால் கட்டடத்தில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் அந்த கட்டிடத்தில் சிக்கி 49 பேர் வரை தீயில் சிக்கி உடல் கருகி பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் சிலரது உடல் கருகியுள்ளதால், அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியான செய்தியறிந்து மிகவும் கவலை அடைந்ததாகவும், பலியானவர்களின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் கூறியிருப்பதாவது:- குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்டோரும் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்தியாவிற்குள்: +91 1800 309 3793, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications