அம்பானி, அதானி பற்றி பேசிய மோடி.. குறுக்கே வந்து சிக்ஸ் அடித்த ப. சிதம்பரம்.. இது லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: அம்பானி, அதானி மீது மாண்புமிகு பிரதமர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்: இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் டெம்போ நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், இதை விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முதல் நாள் தெலங்கானாவின் கரீம்நகரில் நடைபெற்ற பேரணியின் போது, பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் "டீல்கள்" குறித்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. 2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அம்பானி, அதானி ஆகியோரை விமர்சனம் செய்வதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று பிரதமர் மோடி தனது உரையில் கேள்வி எழுப்பினார்.

மோடி பேச்சு: பிரதமர் மோடி தனது பேச்சில், கடந்த ஐந்தாண்டுகளாக காங்கிரஸின் இளவரசர், காலையில் எழுந்தவுடன் அம்பானி, அதானி என்று கோஷமிட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரஃபேல் விவகாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக, அவர் அம்பானி அதானி என்று கோஷமிட்டார். அம்பானி-அதானி, அம்பானி-அதானி என்று மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி சொல்ல ஆரம்பித்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி-அதானியை பேசுவதை அவர் நிறுத்திவிட்டார்
இந்த தேர்தலில் இளவரசர் ராகுல் காந்தி அம்பானி-அதானியிடம் இருந்து எவ்வளவு வாங்கினார் என்று தெலுங்கானா நிலத்தில் இருந்து கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியிடம் எவ்வளவு கறுப்புப் பணம் உள்ளது? நோட்டுகள் நிரப்பப்பட்ட டெம்போ காங்கிரசுக்கு வந்துவிட்டதா? அம்பானி-அதானியை பற்றி பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்கள் என்றால் என்ன ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள்.
உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் டீலிங் என்ன?. ஐந்து வருடங்களாக அம்பானி-அதானியை துஷ்பிரயோகம் செய்து ஒரே இரவில் நிறுத்திவிட்டீர்கள். அப்படி என்றால் உங்களுக்கும் அம்பானி - அதானிக்கும் இடையில் ஏதோ இருக்கிறது. இதற்கு நீங்கள் நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
காங்கிரஸையும் தெலுங்கானாவின் பிஆர்எஸ் கட்சியையும் இணைக்கும் ஒரே 'பேஸ்ட்' ஊழல். சில மதங்களை ஆதரிக்கும் அரசியல் தான் அவர்களின் செயல்திட்டம். காங்கிரஸும் பிஆர்எஸ்ஸும் 'ஜீரோ கவர்னன்ஸ் மாடலை' பின்பற்றுகின்றன. எனவே, இந்த கட்சிகளின் ஊழல் பிடியில் இருந்து தெலுங்கானாவை காப்பாற்ற வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, தலித்துகளுக்கான இடஒதுக்கீடு உரிமைகளைப் பறித்து முஸ்லிம் சமூகத்துக்கும் வழங்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. இந்துக்களின் நலனை உறுதி செய்வது அவர்களின் திட்டமோ அல்லது யோசனையோ அல்ல. காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்க விரும்புகிறது. இந்த ஊழல் கட்சி இந்துக்களை பற்றி கவலையே படுவது இல்லை, என்று தெலங்கானாவின் கரீம்நகரில் நடைபெற்ற பேரணியின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ராகுல் காந்தி பதிலடி: இதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அளித்த பதிலில், "மோடி ஜி வணக்கம்.. நீங்கள் பயந்துவிட்டீர்களா என்ன.. பொதுவாக நீங்கள் மக்களுக்குத் தெரியாமல் தான் அம்பானி, அதானி குறித்துப் பேசுவீர்கள். ஆனால், இந்த முறை முதன்முறையாகப் பொதுவெளியில் அம்பானி, அதானி குறித்துப் பேசியுள்ளீர்கள். அவர்கள் லாரியில் பணம் தருவது உங்களுக்கும் தெரிந்து இருக்கிறது பாருங்கள்.. இது என்ன உங்கள் தனிப்பட்ட அனுபவமா?, என்று கூறியுள்ளார்.
ப. சிதம்பரம் பதிலடி: இதற்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். அதில், மாண்புமிகு பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது. ராகுல் காந்தி வைக்கும் கோரிக்கை சரியானதே. அம்பானி, அதானி மீது மாண்புமிகு பிரதமர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்: இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் டெம்போ நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மாண்புமிகு பிரதமர் அவர்களிடமிருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் விசாரிக்க வேண்டும். சிபிஐ அல்லது ஈடி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
அம்பானி, அதானி மீதான விசாரணை வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது. கடந்த 24 மணி நேரத்தில் மாண்புமிகு பிரதமர் (சிபிஐ அமைச்சர்) ஏன் அமைதியாக இருந்தார்?
விசாரணைக்கான கோரிக்கைக்கு மாண்புமிகு நிதி அமைச்சர் (ED அமைச்சர்) ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை? அவர்களின் மௌனம் அபத்தமானது, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications