ஜிஎஸ்டி வரி குறைப்பு வரவேற்கத்தக்கது! ஆனால்..! ப.சிதம்பரம் விமர்சனம்
சென்னை: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த முடிவை எடுக்க 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு எனும் தீபாவளி பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில் நேற்று ஜிஎஸ்டி வரிகள் இரு அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி சீர்திருத்தம், பொருட்கள் மீதான வரி குறைப்பு என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த முடிவை எடுக்க 8 ஆண்டுகள் தாமதம் என்பது ஏற்க முடியவில்லை.

தற்போது அமலில் இருக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்களை முதலிலேயே அறிமுகப்படுத்தியிருக்கவே கூடாது. இதை நீக்கக் கோரி நாம் 8 ஆண்டுகளாக கதறி வந்தோம். ஆனால் நமது கோரிக்கைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்கவில்லை.
ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசை தூண்டியது எது என்பதை யூகிப்பதில் ஆர்வமாக இருக்கிறது. மந்தமான பொருளாதார வளர்ச்சியா, இல்லை வீட்டுக் கடன் அதிகரிப்பா, வீட்டு சேமிப்பு குறைவதா, பீகாரின் தேர்தலா, டிரம்பின் வரி விதிப்பா, அல்லது இவை எல்லாமுமா என அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். இது மக்களுக்கு தீபாவளிப் பரிசாக அமையும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களும் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.
ஜிஎஸ்டியை 5 சதவீதம் , 18 சதவீதம் என இரு அடுக்குகளாக குறைப்பது பற்றியும் வரிக் குறைப்பு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சிகரெட், புகையிலை, பான் மசாலா, சொகுசு கார், குளிர்பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் பால், சென்னா, பன்னீர், ரொட்டி, இந்திய ரொட்டிகள், நோட்டுப்புத்தகம், பென்சில், அழிப்பான், மேப், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, 33 உயிர் காக்கும் மருந்துகள், புற்றுநோய், அரியவகை நோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அது போல் தேங்காய் எண்ணெய், சோப், ஷாம்பு, பற்பசை, மிதிவண்டி, மேஜை, நாற்காலி, சர்க்கரை, காபி, வெண்ணெய், நெய், சாஸ், சாக்லேட், பிஸ்கெட், உலர் பழங்கள், மார்பிள், கண்ணாடிகள் உள்ளிட்டவைகளுக்கு 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஏசி, 32 இன்ச் தொலைக்காட்சிகள், சிறிய வகை கார்கள், 350 சிசி-க்கு குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள், சிமெண்ட், பேருந்து, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை 28 விழுக்காடு வரியில் இருந்து 18 விழுக்காடு வரிக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வரி சீர்திருத்தம் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அது போல் 33 உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அப்போது 5, 12, 18, 28 ஆகிய சதவீதங்களில் 4 அடுக்குகளாக ஜிஎஸ்டி இருந்தது. இது தற்போது இரு அடுக்குகளாக 5, 18 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications