மாமன்னன்.. உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து பா.ரஞ்சித் பகிரங்கமாக எழுதிய பதிவு.. மிரளும் தலைகள்
சென்னை: மாமன்னன் படம் குறித்து பா ரஞ்சித் பரபரப்பு ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி ஸ்டாலின் அறிந்திருப்பார் என்றும் அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் பா.ரஞ்சித் கூறியுள்ளர்.
மாமன்னன் படம் பெரிய அளவில் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தி உள்ளது. மாரி செல்ராஜ் இதற்கு முன்பு தான் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களில் சாதிய கொடுமைகளால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை காட்டியிருப்பார். முதல் இரண்டு படங்களுமே தென்மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தது.

மூன்றாவது படமான மாமன்னன் மேற்கு மாவட்டங்களில் நடப்பதாக உள்ளது. தலித் மக்கள் அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்களை தங்கள் வீட்டு அடிமை போல் நடத்த விரும்பும் சாதி ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்களின் அத்துமீறல்களையும், அதற்கு அவர்கள் திருப்பி அடித்தால் என்ன நடக்கும் என்பதே கதையாக உள்ளது.
இந்த மாமன்னன் கதையில் உதயநிதி ஸ்டாலின் நடித்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள். தமிழக முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சாதிய மனநிலைக்கு எதிராக திருப்பி அடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தலித்துக்களுக்கு எதிரான வன்முறைகள் முன்பு போல் தமிழகத்தில் இல்லை என்றாலும், இன்னமும் தமிழகத்தில் சாதியவாதிகளால் வன்முறைக்கு தலித்துக்கள் ஆளாகி வருகிறார்கள் என்பதும், அவர்களை தங்கள் அடிமைகளாக நடத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்னமும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை. பகுத்தறிவுடன் கூடிய கல்வி கிடைக்கும் போது மட்டுமே சாதிய மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு நாள் முற்றிலும் அழியும். அதற்கு மாமன்னன் மாதிரியான படங்கள் அதிகமாக வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் வலுவான கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் மாமன்னன் படம் குறித்து எழுதியுள்ள ட்வீட் பதிவில் கூறியுள்ளதாவது: "மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.
உண்மையாகவே தனித்தொகுதி எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன்.

உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்.
பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!" இவ்வாறு பா.ரஞ்சித் தனது ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications