7 பட்டியலின அமைச்சர்கள்.. தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை.. இயக்குநர் பா.ரஞ்சித் போட்ட பதிவு!
சென்னை: தவெக அரசின் அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு வாய்ப்பு அளித்திருப்பதற்காக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்கள் என்று கூறியுள்ள பா.ரஞ்சித், இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த காந்திராஜ் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், கமலி கால்நடைத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

அதேபோல் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சராக தென்னரசு, பத்திரப்பதிவு துறை அமைச்சராக லோகேஷ் தமிழ்ச்செல்வன், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக மதன்ராஜா, உயர்கல்வித்துறை அமைச்சராக காங்கிரஸ் கட்சி விஸ்வநாதன் ஆகியோர் பொறுப்பேற்றனர். ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன் செயல்பட்டு வருகிறார்.
இதற்கு இயக்குநர் பா.ரஞ்சித் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது. நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications