சென்னை டூ மதுரை ரயில் பயணம்! திண்டுக்கல் அருகே பிரிந்த உயிர்! பழனிவேல் ராஜன் நினைவுநாள் இன்று!
சென்னை: மாற்றுக்கட்சியினரும் மதிக்கத்தக்க வகையில் பண்பான அரசியல் செய்த முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் சபாநாயகர் பழனிவேல் ராஜனின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
இன்றைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தந்தையும், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி.டி.ராஜனின் மகனுமான பழனிவேல் ராஜனை பற்றி இன்றைய Throw back stories வரிசையில் பார்க்கலாம்.

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் உத்தமபாளையத்தை பூர்விகமாக கொண்ட பழனிவேல் ராஜன் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்.
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை விளைநிலங்களும், சொத்துக்களும் குவிந்து கிடந்தும் பரம்பரை சொத்தில் அமர்ந்து சாப்பிடாமல் படித்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சொந்த ஊரை விட்டு வெளியேறியவர் பழனிவேல் ராஜன்.
படித்து வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்யத் தொடங்கிய பழனிவேல் ராஜன், கடந்த 1967ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது பண்பான அரசியல் மூலம் கருணாநிதியின் மனதில் மிகப்பெரிய மதிப்பை பெற்றார்.

இறை நம்பிக்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இவர் சாதி, மதம், இனம் என எந்த பாகுபாடும் காட்டாமல் எல்லோரிடத்திலும் கண்ணியமாக நடந்தவர். சட்டமன்ற உறுப்பினர், எம்.எல்.சி., அமைச்சர், சபாநாயகர் என பல பதவிகளை வகித்தாலும் அடக்கமும், அமைதியும் அவரிடமிருந்து மாறவில்லை.
இப்போதுள்ள திமுக அமைச்சர்களை போல் பொதுவெளியில் தொண்டர்களை அடிப்பது, கடுஞ்சொல் பேசுவது என்றில்லாமல் சாந்த சொரூபியாக வலம் வந்தவர் பழனிவேல் ராஜன்.
கடந்த 1996 -2001 திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்த இவர் 2006 திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அமைச்சர் பதவியேற்ற பிறகு சென்னையிலிருந்து சொந்த ஊரான மதுரைக்கு பாண்டியன் ரயிலில் பயணித்த இவர் வழியில் திண்டுக்கல் அருகே மாரடைப்பால் தனது 74வது வயதில் காலமானார்.

சென்னையிலிருந்து மதுரைக்கு ரயில் ஏறச் சென்ற போதே நெஞ்சு அசவுகரியமாக இருப்பதை தன்னுடன் வந்த உதவியாளர்களிடம் கூறிய பழனிவேல் ராஜன், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்த போது மதுரைக்கு போனால் எல்லாம் சரியாகப் போகும் எனக் கூறி பயணித்திருக்கிறார்.
மதுரை வைகை ஆற்றுப்பாலம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பூ மார்கெட், காய்கறி மார்கெட் என மதுரைக்காக இவர் செய்த பணிகள் ஏராளம் ஏராளம். பழனிவேல் ராஜனை அய்யா என்று தான் கட்சியினர் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications