நாங்கள் பணிப்பெண்ணை தாக்கவில்லை.. பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு! பரபர பின்னணி
சென்னை: பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏவாக உள்ளவர் கருணாநிதி.. இவரது மகன் ஆன்டோ மதிவாணனுக்கு மெர்லினா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. அவர்கள் சென்னை திருவான்மியூரில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் வீட்டில் வேலை செய்யப் பட்டியலினத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடந்தாண்டு பணிக்கு அமர்த்தியுள்ளனர். இருப்பினும், மெர்லினா தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக அந்த 17 வயது சிறுமி குற்றஞ்சாட்டியிருந்தார்.
திமுக எம்எல்ஏ: இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அந்த பெண் பகிர்ந்து இருந்தார். அதில் தனக்கு ஏற்பட்ட காயங்களையும் காட்டியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மெர்லினா மீசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இது மிகப் பெரிய பேசுபொருள் ஆன நிலையில், திமுக எம்எல்ஏ கருணாநிதியும் தனது மகன் குடும்பத்துடன் தனியாக வசித்து வருவதாகவும் இது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என விளக்கமளித்திருந்தார்.
இதற்கிடையே கருணாநிதி மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மார்லினா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அளித்த போதிலும் அவர்கள் ஆஜராகவில்லை. தலைமறைவான அவர்களை போலீசார் தேடிய நிலையில். சமீபத்தில் தான் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
வழக்குப்பதிவு: வீட்டுப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாமீன் மனு: இந்த வழக்கில் கடந்த 25ம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது குடும்ப உறுப்பினர் போல பணிப்பெண்ணையும் நடத்தியதாகவும், அவரை கல்லூரியில் சேர்த்து அதற்கான கட்டணத்தையும் தாங்களே செலுத்தியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications