“தவறான புகாரால் சிறையில் இருக்கிறோம்”.. திமுக எம்எல்ஏ மகன், மருமகள் நீதிமன்றத்தில் முறையீடு!
சென்னை: வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாங்கள் தவறான புகாரில் சிறையில் இருப்பதாக நீதிமன்றத்தில் இருவரும் முறையிட்டுள்ளனர்.
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவரது வீட்டில் ஒரு பட்டியலின இளம்பெண்ணை வேலைக்கு வைத்துள்ளனர். இப்பெண் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சார்ந்தவர். 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர். இப்படி இருக்கையில் ஆண்டோ மதிவாணன் வீட்டில் பணிக்கு வந்த இரண்டே நாட்களில் அவர் வேலை செட்டாகவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவரை அனுப்பாமல் தொடர்ந்து வேலை வாங்கியுள்ளனர்.

இது குறித்து அப்பெண், "என்னை அடித்து துன்புறுத்தினார்கள். செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார்கள்" என்று கூறி உடலில் ஏற்பட்டுள்ள காயத்தை காண்பித்தார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், ஆண்டோ மதிவாணன் அவரது மனைவி மெர்லின் ஆகிய இருவரையும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, குற்றவாளிகளுடைய தண்டனையை உறுதி செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ரீதியான கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்திட வேண்டும். அவருடைய உயர்கல்விக்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து நிவாரணங்களையும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டு அமைப்புகளும் வலியுறுத்தின.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லின் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 25ம் தேதி தனிப்படை காவல்துறையினரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி ஆண்டோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், "தவறாக அளிக்கப்பட்ட புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டு, 30 நாட்களாக சிறையில் இருக்கிறார்கள்" என்று கூறினார். இதனையடுத்து இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பதிலளிக்க அவகாசம் வழங்கி ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications