இப்படி செய்தால் பள்ளிக்கரணையும் மடிப்பாக்கமும் பக்காவாக மாறும்.. தாம்பரம் போலீசுக்கு கோரிக்கை
சென்னை: வேளச்சேரி- பள்ளிக்கரணை சாலையில் எப்போது பயணித்தாலும், மடிப்பாக்கம் சந்திப்பான கைவேலி, பள்ளிக்கரணை சந்திப்பான காமாட்சி மருத்துவமனை சந்திப்பிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த பகுதிகளில் யூடர்ன்களை உருவாக்கினால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள சாலை என்றால் அது ஒஎம்ஆர் சாலை அதாவது பழைய மகாபலிபுரம் சாலை.. இந்த பகுதியை தாம்பரத்துடன் இணைக்கும் சாலையாக ரேடியல் சாலையும், பள்ளிக்கரணை சாலையும் இருக்கிறது. இது ஒருபுறம் எனில் கணிசமான ஐடி நிறுவனங்கள் காமாட்சி மருத்துவமனை முதல் பல்லாவரம் இடையே ரேடியல் சாலையில் இப்போது அமைந்துள்ளன.

இதனால் வேளச்சேரி பள்ளிக்கரணை சாலை, துரைப்பாக்கம் ஓஎம்ஆர் சாலை பகுதி முழுவதும் எப்போதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இத்தனைக்கும் வேளச்சேரி பள்ளிக்கரணை சாலை 100 அடி சாலையாகும். இதேபோல் ரேடியல் சாலை 200 அடி சாலையாகும். ஆனால் தாங்க முடியாத அளவிற்கு வாகனங்களால் பள்ளிக்கரணை சந்திப்பே திணறுகிறது. மேலும் மடிப்பாக்கத்தில் நுழையும் வேளச்சேரி மேம்பாலம் முடியும் இடமும் கடுமையான நெரிசலில் திணறுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் சிக்னல்களுக்கு முடிவு கட்ட முடியும் என்று வாகன ஓட்டிகள் தாம்பரம் போலீசுக்கு யோசனை தெரிவித்துள்ளனர். சென்னையில் பல இடங்களில் சிக்னல்கள் யூடர்ன்களாக மாற்றப்படுவது போல் இந்த பகுதியிலும் மாற்றங்களை செய்யலாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சந்திப்பை பொறுத்தவரை வேளச்சேரி இருந்து பள்ளிக்கரணை நோக்கி செல்லும் வாகனங்கள் சிக்னலில் காத்திருக்காமல் மேம்பாலத்தில் ஏறி போக முடியும். அதேபோல் பள்ளிக்கரணையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் வாகனங்களும் மேம்பாலத்தில் ஏறி போய்விட முடியும். ஆனால் பல்லாவரம் ரேடியல் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. இதேபோல் துரைப்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்களும் ரேடியல் சாலையில் பயணிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் வேளச்சேரியில் இருந்து ரேடியல் சாலைக்கு திரும்ப அதிக நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
இந்த பிரச்சனைக்கு தீர்வினை வாகன ஓட்டிகள் முன்வைத்துள்ளனர். இதன்படி வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை சாலையில் வரும் வாகனங்களை துரைப்பாக்கம் சாலையில் 200 மீட்டர் பயணிக்க வைத்து யூடர்ன் எடுத்து திரும்பி செல்ல வழிவகை செய்யலாம். இதேபோல் பள்ளக்கரணையில் இருந்து வேளச்சேரி நோக்கி பாலத்திற்கு கீழ் வரும் வாகனங்களை ரேடியல் சாலையில் முதல் சந்திப்பில் திரும்ப வைத்து யூடர்ன் எடுக்க வைத்தால் எளிதாக சிக்னல் இல்லாமல் பயணிக்க முடியும். ரேடியல் சாலையில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் வாகனங்கள் பாலாஜி நகர் சிக்னலின் அகலத்தை அதிகரித்து யூடர்ன் எடுத்து மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதேபோல் பள்ளிக்கரணை மடிப்பாக்கம் கைககாட்டி சந்திப்பிலும் யூடர்ன் அமைக்கலாம். மடிப்பாக்கம் பிரதான சாலையில் இருந்து வரும் வாகனங்களை வேளச்சேரி மேம்பாலம் அடியில் சென்று யூடர்ன் எடுக்க வைத்து நேராக போக வைக்கலாம்.. இதேபோல் வேளச்சேரி மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்களை பள்ளிகரணை பூங்கா வரை போக வைத்து யூடர்ன் எடுத்து பயணிக்க வைத்தால் அங்குமே பிரச்சனை இருக்காது. இதன் மூலம் அங்கும் வாகன நெருக்கம் இல்லாமல் இருக்கும். குரோம்பேட்டையில் செய்த மாற்றம் போல், இங்கும் செய்தால் பெரிய போக்குவரத்து நெரிசல் வேளச்சேரி சாலை, ரேடியல் சாலையில் குறையும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications