அண்ணாமலை மீதான பஞ்சாயத்து! நிர்மலா சீதாராமனிடம் கொண்டு சென்ற திமுக எம்.பி.! அடுத்தது என்ன?
சென்னை: அண்ணாமலை குறித்த பஞ்சாயத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொண்டு சென்றிருக்கிறார் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி.
அண்ணாமலை தன் நண்பர்களிடமிருந்து மாதம் 7 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் வரை ரூபாய் குடும்ப செலவுக்கு பெற்றதன் அடிப்படையில், இதுவரை 1.76 கோடி வாங்கியுள்ளதை கலாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்ணாமலை குறித்து நிர்மலா சீதாராமனுக்கு கலாநிதி வீராசாமி எழுதிய கடிதம் வருமாறு;

''தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை தன் நண்பர்களிடமிருந்து மாதத்திற்கு ரூபாய் 7 லட்சம் முதல் 8 லட்சம் வரை அவரது குடும்ப செலவுகள், வீட்டு வாடகை மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு சம்பளம் தருவதற்காக பெற்றுக் கொள்வதாக 14.04.2023 அன்று பத்திரிக்கையாளர்களிடம் அறிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து இவ்வாறு பணம் பெற்று வருவதாக கூறியுள்ளார். ஏறத்தாழ ரூபாய் 1.76 கோடி இவ்வாறு வாங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும் தன் கையில் அணிந்திருக்கும் ரபேல் கடிகாரத்தை ரூபாய் 3 லட்சம் பணமாக கொடுத்து சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார்.

1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், அவர் மீது வருமான வரி சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.'' இவ்வாறு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications