வெளிநாடுகளில் பல கோடி ரகசிய முதலீடு.. சிக்கும் சச்சின், புடின், இம்ரான்.. திடுக்கிடும் பண்டோரா ஆவணம்
சென்னை: வெளிநாடுகளில் பல கோடிக்கணக்கில் ரகசியமாக பணம் முதலீடு செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ரஷ்ய அதிபர் புடின், பாடகி ஷகீரா உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரிகளில் இருந்து தப்பிக்கும் வகையில் பனாமா உள்ளிட்ட நாடுகளில் இவர்கள் முதலீடு செய்தது பண்டோரா ஆவணம் மூலம் வெளியாகி இருக்கிறது.
உலகின் பெரும் பணக்காரர்கள், கொள்ளையர்கள், மிகப்பெரிய டான்கள் பொதுவாக பனாமா, சைப்ரஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளில் பணம் பதுங்குவது உண்டு. பணம் பதுங்குவது என்றால் அங்கு இருக்கும் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்வது, அல்லது அந்த நாடுகளில் ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்வது, அல்லது வேறு பல்வேறு வகைகளில் அந்த நாடுகளில் பணத்தை குவிப்பது. இது போன்ற நாடுகளில் வரி என்பது மிக மிக குறைவு.
இந்தியாவில் வரி கட்ட விருப்பம் இன்றி இது போன்ற நாடுகளில் பணத்தை பல பணக்காரர்கள் ரகசியமாக முதலீடு செய்வது உண்டு. இந்தியாவில் சொத்தை கணக்கு காட்டாமல், பனாமா போன்ற நாடுகளில் அதை பதுக்குவார்கள். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு முறையாக பணக்காரர்கள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் வராமல் போகும்.

பண்டோரா ஆவணம்
பலர் கோடி கணக்கில் இது போன்ற நாடுகளில் பெயர் அடையாளத்தை வெளியிடாமல் சொத்து வாங்குவது உண்டு. இது வரி ஏய்ப்பு மற்றும் சொத்து மறைப்பு ஆகும். பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இதற்கு முன் இந்த பதுக்கல் முறைகேட்டில் சிக்கி உள்ளனர். இப்படி பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணம்தான் பண்டோரா ஆவணம். இதை இதற்கு முன்பே சர்வதேச ஊடகங்கள் கசியவிட்ட நிலையில் மீண்டும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு உள்ளது. ஐசிஐஜே எனப்படும் The International Consortium of Investigative Journalists அமைப்பு இந்த பண்டோரா ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

யார் வெளியிட்டது?
The International Consortium of Investigative Journalists அமைப்பு இந்த ஆவணங்களை உலகின் 600கும் மேற்பட்ட செய்தியாளர்களுடன் பகிர்ந்து உள்ளது. உலக வரலாற்றில் மிகப்பெரிய பண்டோரா ஆவண லீக் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி 150 செய்தி நிறுவனங்களுடன் ஐசிஐஜே இந்த ஆவணங்களை பகிர்ந்து உள்ளது. மொத்தம் 11.9 மில்லியன் ஆவணங்கள் இதில் இடம்பெற்று இருப்பதாக ஐசிஐஜே தெரிவித்துள்ளது.

எங்கெங்கு?
இந்த ஆவணங்களில் உலகின் பல முக்கிய புள்ளிகள் பணம் பதுக்கியதும், ரகசிய முதலீடு செய்ததும் அம்பலம் ஆகியுள்ளது. 91 நாடுகளின் பிரபலங்கள் இப்படி பண பதுக்கல் செய்துள்ளனர். பெல்சி, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து, பனாமா, பார்ப்டோஸ், சைப்ரஸ், துபாய், பஹாமாஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், வியட்நாம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே இதேபோல் தி பனாமா, பாரடைஸ் பேப்பர்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் வெளியாகி இருந்தது. இதற்கு முன் 2016, 2017ல் இந்த ஆவணங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் அதே பண்டோரா பூதம் கிளம்பி உள்ளது. இந்த ஆவணங்களை ஐசிஐஜே அமைப்பிற்கு கொடுத்தது யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

சச்சின்
இந்த ஆவணங்களில் சச்சின் டெண்டுல்கர் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் பல கோடி பணத்தை ரகசியமாக முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. சச்சின் டெண்டுல்கர், பாப் பாடகி ஷகீரா, மாடல் கிளவுடியா, இத்தாலி டா லெல் தி பேட் ஒன் போன்றவர்கள் இந்த பதுக்கலில் ஈடுபட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜோர்டான் மன்னர், உக்ரைன் அதிபர்கள், கென்யா, ஈக்குவேடார், செஸ் குடியரசு பிரதமர், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ஆகியோர் பெயர்களும் இந்த ஆவணங்களில் அடங்கி உள்ளதாம்.

பாகிஸ்தான்
ரஷ்ய அதிபர் புடின் பெயரும், அவரின் அமைச்சர்கள் பெயரும், 130 ரஷ்ய பில்லியனர்கள் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளதாம். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர்கள், அவரின் உறவினர்கள், பாகிஸ்தான் நிதி அமைச்சர், புரோக்கர்கள் சிலரின் பெயரும் இதில் இடம்பெற்று உள்ளதாம். இதனால் சர்வதேச பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சச்சின் வழக்கறிஞர் இந்த புகார்களை மறுத்து இருக்கிறார். சச்சினின் முதலீடு எல்லாம் நேர்மையான முறையில் செய்யப்பட்ட முதலீடு என்று அறிவித்துள்ளார். இந்த பண்டோரா ஆவணங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications