பரந்தூர் விமான நிலையம் தமிழக வளர்ச்சிக்கு அவசியம்.. விஜய் கோரிக்கைகளை சொல்லலாம்.. தங்கம் தென்னரசு!
சென்னை: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாளை பரந்தூரில் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ள நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு புதிய விமான நிலையத்தின் தேவை குறித்து பேசி இருக்கிறார்.
தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்து. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி 5,100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இதனை எதிர்த்து ஏகனாபுரம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரந்தூரில் போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை சந்திக்கவுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் நிதி மேலாண்மையில் நுட்பமாக செயல்பட்டு வருகிறோம்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கும் மாநில அரசு தான் அதிக நிதியை கொடுக்கிறது. அதேபோல் அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி சுமையையும் நாங்கள் தான் சரி செய்து வருகிறோம். அதனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் கடன்கள் குறித்த குற்றச்சாட்டுகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு அளிக்க வேண்டிய பங்கீடுகளை சரியான நேரத்தில் அளிக்க வேண்டும். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தான் அதிக நிதி அளிக்கப்படுகிறது. உ.பி.க்கு மட்டும் ரூ.31,039 கோடியும், பீகார் ரூ.17,403 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென் மாநிலங்களுக்கு 15 சதவிகிதம் தான் நிதி பகிர்வில் கிடைத்துள்ளது.
5 மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.27,336 கோடி தான் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.7,056 கோடி தான் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையில் தான் பார்க்கிறது. இப்படியிருந்தும் தமிழ்நாடு நிதி நிலைமையை சிறப்பாக கையாண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விஜய் பரந்தூர் செல்வது குறித்த கேள்விக்கு, விமான நிலையங்களை உருவாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானது. இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் ஒப்பிடும் போது, சென்னை விமான நிலையம் சிறியது தான். இருந்தாலும் சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 2 கோடி பேர் பயணம் மேற்கொள்கின்றனர்.
அடுத்த 7 ஆண்டுகளில் இது இன்னும் உயரும். இதனால் சென்னை விமான நிலையத்தை விரிவுப்படுத்தினாலும், சமாளிக்க முடியாது. இதனால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி இரண்டுக்கும் இடையில் உள்ள தொடர்பை உணர்ந்திருப்பதால் தான், பரந்தூர் விமான நிலையம் அவசியம். இது தொழிற்புரட்சிக்கும் அடித்தளமாக அமையும்.
தொழில், வர்த்தக கட்டமைப்பு வளர்ச்சியை பரந்தூர் விமான நிலையம் உறுதி செய்யும். பரந்தூருக்கு எந்த அரசியல் கட்சி தலைவர்களும் செல்லலாம். விஜய் சந்திக்கும் போது மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால், நிச்சயமாக அந்த குறைகளை அரசு பரிசீலிக்கு. விஜய் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் எல்லாவற்றுக்கும் தேவையாக உள்ளது. அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மக்கள் பாதிக்கக் கூடாது. அதனால் கிராமங்களில் பாதிப்படையக் கூடிய மக்களுக்கு, சந்தை மதிப்பை விடவும் கூடுதல் இழப்பீடு அளிப்பதும், அவர்களின் மறுகுடியமர்விலும் கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications