அத்தனை எதிர்ப்பு இருக்கே? பரந்தூர் விமான நிலையம் பணி ஆரம்பமாகுதா? இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: சென்னையின் 2-வது விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி 5000 ஏக்கரில் அமைகிறது. விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த முனைந்துள்ளன. ..

வலுக்கும் எதிர்ப்புகள்
குறிப்பாக, பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் 2-வது பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன.. இதற்காக சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், இந்த விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக கையகப்படுத்தப்பட உள்ளதால், இந்த கிராமத்தை மையமாக வைத்து இத்திட்டத்துக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு அனுமதி
இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அனுமதிக்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.. இதனை பரிசீலித்த ஆணையம் திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை கடந்த ஏப்ரல் மாதம் வழங்கியது.
இந்த விமான நிலைய திட்டத்திற்கு இடஅனுமதி ஏற்கனவே கிடைத்த நிலையில் திட்ட ஒப்புதலும் கிடைத்திருந்ததால், புதிய விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
முதலமைச்சர் ஆலோசனை
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் தொழில்துறை அமைச்சர், தொழில் துறை அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.. ஏர்போர்ட் அமைப்பதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியிருந்த நிலையில், இதன் கட்டுமான பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்தெல்லாம் இன்றைய தினம் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.
பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வரின் இந்த ஆலோசனை மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது.
பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணி தொடங்கப்படும்பட்சத்தில், விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து 2026ம் ஆண்டு தொடங்கி 2028-ம் ஆண்டில் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications