பரந்தூர் விமான நிலைய போராட்டம்.. இன்று மக்களை நேரடியாக சந்திக்கும் அமைச்சர்கள் டீம்.. என்ன நடக்கும்?
சென்னை: தமிழக அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் குழு இன்று பரந்தூர் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் செய்து வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுங்வார்ச்சத்திரம் அருகே உள்ள பரந்தூரில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
ஆனால் இந்த விமான நிலையத்திற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும்.

பரந்தூர் விமான நிலையம்
இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது இங்கே கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்கும். ஆனாலும் சென்னை விமான நிலையம் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். 2017-18ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது.

விமான நிலையம்
சென்னை விமான நிலையம் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தாலும், இடநெருக்கடி காரணமாகவும் கடுமையாக சிரமப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

போராட்டம்
மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பாக இந்த நிலம் வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்த முடிவு செய்த நிலையில் மக்களுக்கு அதற்கு எதிராக கடுமையான போராட்டங்களை அறிவித்து உள்ளனர். மக்கள் பலர் குழுக்களாக இணைந்து கடந்த மூன்றரை மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த விமான நிலையத்திற்காக விவசாய நிலத்தை கேட்கிறார்கள் என்று கூறி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 16 கிராம மக்கள்தான் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பேரணி
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துவதாக மக்கள் அறிவித்து இருந்தனர். அதன்படியே கருப்பு கொடி ஏந்தி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். இதையடுத்து மக்களுடன் கோட்டாட்சியர், காஞ்சிபுரம் எஸ்.பி. தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறிய நிலையில் மக்கள் பேரணியை கைவிட்டனர். இந்த நிலையில் அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் குழு இன்று பரந்தூர் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.












Click it and Unblock the Notifications