பிபிசி ஆவணப் படம், அதானி :நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்ப முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் , நீட் மசோதா, சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக திமுக எம்.பிக்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் கூடுகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதல் நாள் உரையாற்றுகிறார். பின்னர் பொருளாதார ஆய்வு அறி0க்கை தாக்கல் செய்யப்படும்.

இதனைத் தொடர்ந்து பின்னர் பிப்ரவரி 1-ந் தேதி 2023-24-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை- பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என்பது எதிர்பார்ப்பு.
நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 13-ந் தேதி வரை முதல் அமர்வு; மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை 2-வது அமர்வு நடைபெற உள்ளது. முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து நாளை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதன்மை பிரச்சனைகளான சேது கால்வாய் திட்டம், நீட் மசோதா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல் உள்ளிட்டவைகளை எழுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, பிரதமர் மோடி- குஜராத் வன்முறை தொடர்பாக பிபிசி ஆவணப் படம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதேபோல அதானி குழும மோசடிகள், வங்கி கடன்கள் குறித்து கேள்வி எழுப்பவும் அறிவுறுத்தல் வழங்கினார். நீட் மசோதாவுக்கு விலக்கு அளிப்பது, சேது கால்வாய் திட்டம், நீதித்துறை மீதான மத்திய அரசின் விமர்சனங்கள், அரசியல் சாசனத்தின் அடிப்படையை மாற்றும் போக்குகள் ஆகியவை தொடர்பாகவும் நாடாளுமன்ற இரு சபைகளிலும் திமுக எம்பிக்கள் கேள்வி கேட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார் என்றன.
மேலும் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை இலங்கையில் இருந்து மீட்க வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு தாமதம் இல்லாமல் ஒப்புதல் தர வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக விரிவாக்கம் செய்ய வேண்டும்; மத்திய அரசின் தமிழ்நாட்டு அலுவலகங்களில் தமிழருக்கே வேலை தர வேண்டும்; ஈழத் தமிழருக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தம் திமுக முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது, கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும் தடுப்பூசிகளைப் பெறுவது, என்.எல்.சி. நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது உள்ளிட்டவை குறித்தும் இரு சபைகளிலும் குரல் எழுப்பவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications