நிலத்தை வாங்குவோருக்கு இந்த ஆவணங்கள் அவசியம்.. பஞ்சமி நிலத்தை வாங்கலாமா? DC பட்டாவை எப்படி அறிவது?
சென்னை: புறநகர் பகுதிகளில் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட மனைக்கான பட்டா விஷயத்தில் சற்று கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. அந்தவகையில் பஞ்சமி நிலங்களை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.. பஞ்சமி நிலம் பற்றி அறிய, அதன் பட்டாவை எப்படி அறிவது? எங்கு அறிந்து கொள்ள முடியும்? ஆர்எஸ்எல்ஆர் ஆவணங்கள் என்றால் என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
நிலமற்ற ஏழை பட்டியல் பிரிவு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, கடந்த 1892-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளை நிலங்கள் தான், DC நிலம் அதாவது Depressed Class Land என்று சொல்லக்கூடிய பஞ்சமி நிலமாகும்.

அவர்களது ஆட்சிக் காலத்தில் இந்திய அரசின் வருவாய்த்துறை பதிவேடுகளில் உள்ள விளை நிலங்களில் பஞ்சமி நிலம் என்பதை தனியாகவும், மற்ற நில வகைகளை நத்தம் புறம்போக்கு, புறம்போக்கு, மானாவாரி, தரிசு, நீர்ப்பாசன சாகுபடி நிலம் என்றும் வகைப்படுத்தி வைக்கப்பட்டன.
பஞ்சமி நிலங்கள் சிறப்பு
1950-க்கு பின்னர் வினோபாவின் பூதான இயக்கத்தின் கீழ் நிறைய நிலங்கள் பட்டியல் இன மக்களுக்கு அரசாங்கம் மூலம் வழங்கப்பட்டது. அத்தகைய நிலங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன..
ஆங்கில அரசாங்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளித்த பஞ்சமி நிலங்களை ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களை தவிர வேறு யாரும் வாங்கக் கூடாது என்றும், அப்படி வாங்கினால் அந்த விற்பனை செல்லாது என்ற விதிமுறை இன்றும் சட்ட நடைமுறையில் உள்ளது...
நாடு முழுமைக்கும் உள்ள பட்டியலின மக்களுக்கு இலவச நிலங்கள் வழங்கப்பட்டதையடுத்து, இங்கு விவசாயம் செய்யவோ அல்லது வீடு கட்டிக்கொள்ளவோ அம்மக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், முதல் 10 ஆண்டுகளுக்கு இந்த நிலங்களை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாது. தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு, அந்த நிலங்களை பட்டியலின மக்களிடம் மட்டுமே விற்க முடியுமே தவிர, வேறு சாதியினருக்கு விற்க முடியாது.
பஞ்சமி நிலத்தின் பட்டா
பட்டியலினத்தை சாராத நபர்கள், பஞ்சமி நிலத்தை வாங்க முயற்சித்தால் அதனை அரசு பதிவு செய்திடக்கூடாது. அப்படியே தெரியாமல் பதிவு செய்யப்பட்டுவிட்டாலும், எந்தவித இழப்பீடுமின்றி அந்த நிலங்களை மீட்டு, உரியவரிடமே ஒப்படைக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.
எனவே, பஞ்சமி நிலங்களை பட்டியல் இன மக்களை தவிர வேறு யார் வாங்கினாலும் அந்த விற்பனை செல்லாது, அந்த நிலத்தை அரசே பறிமுதல் செய்துவிடும்..
அரியலூர் வழக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில்கூட அரியலூர் மாவட்டத்தில் நடந்த வழக்கு ஒன்றில் சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை வழங்கியிருந்தது..
அதில், "பஞ்சமி நில விவகாரத்தில், பஞ்சமி நிலத்தை பயன்படுத்தி வரும் நபர்களிடம் இருந்து மீட்டு, அந்த நிலத்திற்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, தகுதியான நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்" என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
எனவேதான், புறநகர் பகுதிகளில் நிலம் வாங்க விரும்புபவர்கள், பஞ்சமி நிலம், அதன் பட்டா பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்றும், சம்பந்தப்பட்ட மனைக்கான பட்டா விஷயத்தில் சற்று கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இரண்டு வழிமுறைகள் என்னென்ன?
பஞ்சமி நிலம் பற்றி அறிய அதன் பட்டா பற்றி அறிய வேண்டுமானால், இரு வழிமுறைகள் உள்ளன.. முதலாவதாக, மனை, இடம் வாங்க முற்படுகிறீர்கள் என்றால், அங்குள்ள விஏஓ அலுவலகத்திலுள்ள மேனுவல் அ-பதிவேடுகளை பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் வாங்க போகும் மனை அல்லது நிலம் குறித்த பதிவேடுகளை, அங்குள்ள புத்தகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் என்பதால், அந்த நிலத்தின் சர்வே நம்பரை வைத்து, பஞ்சமி நிலமா? கண்டிஷன் நிலமா? கிரயம் தடை செய்யப்பட்ட நிலமா? கள்ளர் நிலமா? ஆதிதிராவிடர் நிலமா? போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.
ஒருவேளை டி.சி நிலம் (Depressed Class Land) என்று பதிவாகியிருந்தால், அந்த குறிப்பிட்ட நிலத்தை வாங்காமல் முன்கூட்டியே தவிர்த்துவிடலாம்.. நகர்ப்பகுதிகள் மனை அல்லது நிலம் வாங்குவதாக இருந்தாலும், பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR போன்றவற்றின் ஆவணங்களை அறிவது அவசியம்.
ஆர்எஸ்எல்ஆர்
இரண்டாவதாக, நீங்கள் வாங்க போகும் நிலம் அல்லது நிலம் உள்ள கலெக்டர் அலுவலகம் சென்று ஆர்எஸ்எல்ஆர் (ReSettlement Land Record - RSLR) ஆவணத்தை பெற்று தெரிந்து கொள்ள வேண்டும். அதில் டி.சி நிலம் (Depressed Class Land) என்ற குறிப்பு இருக்கும் பட்சத்தில் அது பஞ்சமி நிலம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக செயல்படலாம்
எனேவ, புறநகர் அல்லது நகர்ப்பகுதிகளில் நீங்கள் நிலம் வாங்கும்போது, எந்த சந்தேகம் வந்தாலும், பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR போன்ற ஆவணங்களை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதற்கு பிறகுதான், சம்பந்தப்பட்ட மனை அல்லது நிலத்தை வாங்குவது பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
மீட்கும் நடவடிக்கையில் அரசு
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியலின மக்களுக்கு சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது 1 லட்சத்து 26 ஆயிரத்து 133 ஏக்கர் பஞ்சமி நிலம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இதில் சுமார் 933 ஏக்கர் நிலங்கள் மீட்கபட்டிருப்பதாகவும், மேலும் 4 ஆயிரத்து 431 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications