இனாம் ஒழிப்பு சட்ட பட்டா.. சொத்துகள் பத்திரப்பதிவு! கோயில் நிலங்களின் லிஸ்ட் தேவை: தமிழக பதிவுத்துறை
சென்னை: வக்ப் வாரியத்திடம் இருந்து கடிதம் வந்ததாகக் கூறி, சில இடங்களில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்ய மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதற்கு தீர்வு காண தமிழக பதிவுத்துறை முற்பட்டுள்ளது.. அந்தவகையில், கோயில் நிலங்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என்று டிஐஜிகளுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.. இது தொடர்பான கடிதத்தையும் அவர்களுக்கு அனுப்பி லிஸ்ட் கேட்டுள்ளார்.
நீர்நிலை புறம்போக்கு, கோயில் நிலங்களை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, தமிழ் நிலம் தகவல் தொகுப்பில், தனி அடையாள குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சர்வே எண்களுக்கு வழிகாட்டி மதிப்புகளை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதில், அரசு நிலங்களை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, புதிய வழிமுறையை பதிவுத்துறை கடைபிடிக்க துவங்கியுள்ளது..

அரசுக்கு சொந்தமான நிலங்கள்
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சொல்லும்போது, "அரசுக்கு சொந்தமான நிலங்களை போலி ஆவணங்களை பயன்படுத்தி, தனியார் அபகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, அரசு நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நீக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பத்திரப்பதிவுக்காக இணையதளத்தில், சொத்தின் சர்வே எண்ணை உள்ளீடு செய்யும்போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில், தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு - டோக்கன்
உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணை உள்ளீடு செய்யும்போது, அது அரசு சார்ந்த நிலமாக இருந்தால், பத்திரப்பதிவு தொடர்பாக அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது. இதனால், பத்திரப்பதிவுக்கான டோக்கன் பெறும் முன்பே தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறையான தனியார் நிலமாக இருந்தால் மட்டுமே, பத்திரப்பதிவுக்கான டோக்கன் கிடைக்கும். இதனால், அரசு நிலங்கள் அபகரிப்பு தடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
தமிழக பதிவுத்துறை தலைவர்
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த விபரங்களை பட்டியலாக அனுப்ப வேண்டும் என்று என, பதிவுத்துறை மண்டல டிஐஜிக்களுக்கு அந்த துறையின் தலைவரான, ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடிதம் எழுதியிருக்கிறார்.. அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் சிலர் அபகரிப்பதாக புகார்கள் எழுந்தன. அவற்றை பாதுகாக்கவும், அதுதொடர்பான பத்திரப்பதிவுகளை தடுக்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஹிந்து சமய அறநிலையத்துறை கோரிக்கை அடிப்படையில், கோவில் நிலங்களுக்கான சர்வே எண்களுக்கு, வழிகாட்டி மதிப்புகளை நீக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்தது. எனினும் சில இடங்களில், கோவில் நிலங்கள், நீக்கப்படாத வழிகாட்டி மதிப்புகளை பயன்படுத்தி, பத்திரப்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
பட்டா, பத்திரப்பதிவு, கோவில் நிலம்
இந்நிலையில், வக்ப் வாரியத்திடம் இருந்து கடிதம் வந்ததாகக் கூறி, சில இடங்களில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்ய மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், பொதுமக்கள் தங்கள் நிலங்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், இனாம் முறை ஒழிப்பின் போது, பட்டா வழங்கப்பட்டதாக கூறி, சிலர் கோவில் நிலங்களை, தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ய முயற்சித்து வருகின்றனர். இந்த நிலங்கள் விஷயத்தில், உண்மை நிலவரம் தெரியாமல் முடிவு எடுத்தால் குழப்பம் ஏற்படும்.
எனவே, இனாம் ஒழிப்பு காலத்தில் வழங்கப்பட்ட பட்டா; கோவில் நிலம் என ஹிந்து சமய அறநிலையத்துறை அளித்த கடிதங்கள்; தனியார் பெயரில் பத்திரப்பதிவை நிறுத்தக்கோரி வக்பு வாரியம் அளித்த கடிதம் போன்றவற்றின் விபரங்களை, சார் - பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களிடம் இருந்து பெற வேண்டும். அவற்றை பட்டியலாக தயார் செய்து, தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் தினேஷ் ஆலிவர் எழுதியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications