பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்.. இன்று கருத்து கேட்பு கூட்டம்.. மீனவர்கள் புறக்கணிப்பு ஏன்?
சென்னை: சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்தது முதலே, அங்கு ஏகப்பட்ட பரபரப்பும், சலசலப்பும் தொற்றுக் கொண்டுவிட்டது.. தலைமைச் செயலகம் அமைப்பதற்காக நிலம் அடையாளம் காணப்பட்டு, அடுத்தகட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனாலும் இந்தத் திட்டத்தை சுற்றி எழுந்துள்ள எதிர்ப்பு இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலக வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மொத்தம் 25.55 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலங்களும் இடம்பெற்றுள்ளன... இந்த நிலங்களில் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியையும் அரசு பெற்றது.
பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்
அதுமட்டுமல்லாமல், 3 மாதங்களுக்குள் DPR எனப்படும் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கவும், அடுத்தகட்ட பணிகளை தொடங்கவும் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, தலைமைச் செயலகம் அமைய உள்ள நிலத்தின் பயன்பாட்டு வகைப்பாட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. குடியிருப்பு பயன்பாட்டில் இருந்த 21.37 ஏக்கர் நிலத்தை வணிகப் பயன்பாட்டுக்கு மாற்ற சிஎம்டிஏ குழுமக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆனாலும், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு அந்தப் பகுதியை சேர்ந்த மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இன்று கருத்துக் கேட்பு கூட்டம்
இப்படிப்பட்ட சூழலில்தான், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மீனவ அமைப்புகளின் கருத்துகளைக் கேட்க இன்று (நவம்பர் 3) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மீன்வளத்துறை சார்பில் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளை நேற்று கைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் ஓரிரு பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
96 குடியிருப்புகள்
இதனிடையே, பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 3.82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள 96 பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், குடியிருப்புகளை இடிப்பதற்கான காரணங்கள் குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 1986-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் இந்த 96 வாடகைக் குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. நாளடைவில் அவை பழுதடைந்ததால், தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், கியூப் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி குடியிருப்புகளை ஆய்வு செய்து, அவற்றை இடிக்க பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, குடியிருப்புகளை காலி செய்யுமாறு அங்கு வசித்து வந்தவர்களுக்கு 2022-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அந்த குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடும் 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
இதனை எதிர்த்து குடியிருப்புதாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், குடியிருப்புதாரர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டும் என்று 2024-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, குடியிருப்புதாரர்கள் தாக்கல் செய்த 7 ரிட் மனுக்கள் மீதான விசாரணையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து 25 பேர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிமன்றம், 2026-ம் ஆண்டு குடியிருப்புகளை 45 நாட்களுக்குள் காலி செய்ய உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, குடியிருப்புதாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு அனுமதி மனுவையும் (SLP) உச்ச நீதிமன்றம் கடந்த 2026-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்த நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் பழுதடைந்த குடியிருப்புகளை இடிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு மறுப்பு
இதற்கிடையே, பட்டினப்பாக்கத்தில் பழைய குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்புப் பிரிவு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பழைய குடியிருப்புகளை இடிப்பதற்கு தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளே காரணம் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தை புறக்கணிப்பு
ஆனால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக நடைபெற உள்ள இன்றைய கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க எழுத்துப்பூர்வமான அழைப்பு எதுவும் வராததால், கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அந்த அமைப்பு நேற்று கடிதம் அளித்துள்ளது.
இதுகுறித்து நெய்தல் மக்கள் கட்சித் தலைவர் கு.பாரதியும் தெரிவித்துள்ளார். இதனால் இன்று நடைபெற உள்ள கருத்துக் கேட்பு கூட்டத்தில் மீனவ அமைப்புகளின் பங்கேற்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
