என்ன ஏற்பாடு பண்ணீங்க.. மக்களை காப்பாற்ற கூட முடியல.. மெரினாவில் கொந்தளித்த மக்கள்
சென்னை: 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு, சென்னை மெரினா கடற்கரை லட்சக்கணக்கான கூட்டத்தை விமானப்படை சாகச நிகழ்ச்சியில் கண்டுள்ளது. இதை மிகப்பெரிய சாதனை என்று அரசு பெருமைப்பட்டு கொள்ளலாம். ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாமல், உயிரிழந்தும், மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களிடம் அரசு மீது கோபம் மட்டுமே மிஞ்சியிருக்கும். அப்படி ஒரு பெண் தன் கோபத்தை காவல்துறை மீது வெளிப்படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக சென்னை முழுவதும் இருந்து பல லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். ஆனால் மக்களுக்கு அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ என்று அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஒருகட்டத்தில் மக்களால் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். இது மக்களை கோபமடைய செய்தது. காவல்துறையால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். போக்குரத்து சீரானாலும், கூட்டத்தில் சிக்கிய மனிதர்களின் உடல்நிலையும், மனநிலையும் சீராகவில்லை. இந்நிலையில் மக்கள் சாலையில் மயங்கி விழுந்து, முதலுதவி சிகிச்சை கூட செய்ய முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. அதனால் மக்களின் கோபம் காவல்துறை மீது திரும்பியது.
காமராஜர் சாலையில் ஒரு பெண் கோபத்தின் உச்சிக்கே சென்று, சார் ஏதாவது ஏற்பாடு பண்ணீங்களா. அப்பறம் எதுக்கு வந்தீங்க என்று ஆவேசமாக கேள்வி எழுப்புனார். தொடர்ந்து அருகில் இருந்த காவல்துறை வாகனத்தை தட்டி தன் கோபத்தை வெளிப்படுத்தினார். பொது மக்களை காப்பாற்ற முடியவில்லை. உங்களுக்கு மட்டும் வண்டி கேட்குதா வண்டி என்று ஆவேசமாக போலீஸ் ஜீப்பை தட்டியபடி அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
அந்தப் பெண்ணின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அந்த வாகனம் அங்கிருந்து சென்றது. மேலும் அங்கிருந்த போலீஸாரிடம் அந்தப் பெண் உள்பட, காவல்துறையினர் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்களின் உயிரைப் பணயம் வைத்து, விமானப்படை சாதனைக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்துவது சரியல்ல. பாதுகாப்புப் பணிகள் மிகவும் மோசமாக உள்ளது. இதைவிட சிறிய கூட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் மாநில அரசு, இந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டிருந்தால் நிலைமையை கட்டுப்படுத்தியிருக்கலாம்.
மக்களின் இந்த கோபத்துக்கு அரசாங்கம் என்ன பதில் வைத்து இருக்கிறது என்று கொந்தளித்துள்ளனர். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்தப் பிரச்னை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில், முதலமைச்சரும், காவல்துறையும் அந்த குறிப்பிட்ட ஒரு குடும்பத்துக்காக மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அந்த ஒரு குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமே தமிழ்நாடு அரசின் இலக்கு. மற்ற குடும்பங்கள் குறித்து அக்கறை இல்லை என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், ஏற்கனவே கடந்தாண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான, இசை நிகழ்ச்சியில் அதிகளவு கூட்டம் சேர்ந்து மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டது. அதில் இருந்து அரசு இன்னும் பாடம் கற்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications