2021 தேர்தல் அறிக்கையை அப்படியே கொடுத்து இருக்கு "திமுக.." லிஸ்ட் போட்டு அண்ணாமலை அட்டாக்
சென்னை: திமுக கடந்த 2021 -ஆம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டும் அதே வாக்குறுதியை கொடுத்துள்ளது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக இன்று வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு, பெட்ரோல் விலை ரூ.75 ஆகவும் டீசல் விலையை ரூ.65 ஆகவும் குறைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை குறித்து அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான், 2021 - தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டும் அதே வாக்குறுதியை கொடுத்துள்ளது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.
திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?
இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக.
மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் 3 -வது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
* மாநில உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியல் அமைப்பு திருத்தப்படும்
* ஆளுநர் பதவி என்பது தேவையில்லாதது என்றாலும் இருக்கும் வரை முதல்வரின் ஆலோசனை பெற்று நியமிக்கபப்ட வேண்டும்.
* ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்
* உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும்
* புதுவைக்கு மாநில அந்தஸ்து
* மத்திய அரசு பணிக்கு தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும்.
* அனைத்து மாநில வளர்ச்சிக்கும் சம அளவு நிதி
* திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கபப்டும்.
* தாயகம் திரும்பிய இலங்கை தமிழருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.
* ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செயய்யப்படும்.
* புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்.
* நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக அமல்
* நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலை உணவு
* இந்தியா முழுவதும் மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்.
* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு.
* எல்.பிஜி சிலிண்டர் விலை 500 ஆக குறைக்கப்படும்.
* பெட்ரோல் விலை 75 ஆக் குறைக்கப்படும்.
* டீசல் விலை: 65ஆக குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications