ஒரே நாளில் ஷாக் கொடுத்த தக்காளி விலை.. அப்படியே இறங்குவது போல இறங்கி.. யூ டர்ன் போட்டு.. அட போங்க!
சென்னை: கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஓரளவு குறைந்த நிலையில் இன்று மீண்டு சதமடித்துள்ளது. கோயம்பேடு மார்கெட்டில் கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.
சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் இடமாக கோயம்பேடு சந்தை இருக்கிறது. இந்த சந்தைக்கு தினமும் 1,200 டன் காய்கறிகள் வரும். ஆனால் பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும்.

ஆனால் கடந்த சில நாட்களாக வெறும் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்திருக்கிறது. அதாவது தக்காளி வரத்து பாதியாக குறைந்திருக்கிறது. எனவே விலை அதிகமாக இருக்கிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "கடந்த மாதம் முழுவதும் தக்காளி கிலோ.10 ரூபாய்க்குதான் விற்பனையானது. மேலும் அதிக அளவில் மீதமிருந்ததால் நாங்கள் கொட்டிவிட்டோம். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. வழக்கமாக வரும் லோடு எதுவும் இன்று வரவில்லை.
வரத்து பற்றாக்குறைதான் இந்த விலையேற்றத்திற்கு காரணம். மட்டுமல்லாது சில வியாபாரிகள் குளிர்சாதன கிடங்கில் சேமித்து வைத்து அடுத்த நாளும் விற்பனை செய்கின்றனர்.
ஆனால் எல்லா வியாபாரிகளுக்கும் இது சாத்தியமில்லை. எனவே அரசு குளிர்சாதன கிடங்குகளை கட்டி தர வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் காய்கறிகளை சேமித்து வைத்து தட்டுப்பாடு ஏற்படாமல் விற்பனை செய்ய முடியும். தற்போது 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.800-900 வரை வாங்கி வருகிறோம்" என்று கூறியிருந்தனர். இதனையடுத்து நேற்று தக்காளி வரத்து ஓரளவு அதிகரித்தது. இதனால் கிலோ ரூ.100 என விற்கப்பட்ட தக்காளி, ரூ.85 ஆக குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் ரூ.15 உயர்ந்து ரூ.100ஐ தொட்டிருக்கிறது.
தக்காளி மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் ரூ.100ஐ தாண்டிருக்கிறது. குறிப்பாக சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.150,பட்டாணி விலை ரூ.200, இஞ்சி விலை ரூ.220, பூண்டு விலை ரூ.200 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்பதை இல்லத்தரசிகள் அதிகம் யூடியூபில் தேட தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications