Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1000 பொங்கல் பரிசு கிடையாது.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய அரசு.. வெடித்த அதிருப்தி குரல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில், ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 கிடைக்காதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் குமுறல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சிரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கடந்த பல ஆண்டுகளாகவே, பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணமும் அளிக்கப்பட்டு வருவதால், இந்த ஆண்டு பரிசுத்தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் பெரும் விவாதமானது. அடுத்த இரண்டொரு நாட்களில், தமிழக அரசிடமிருந்து நற்செய்தி வந்தது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

People are upset over dmk government for did not get Pongal gift Rs 1000 token

பொங்கல் பரிசு டோக்கன்: பொங்கல் பரிசுத்தொகைக்கு டோக்கன்கள் வழங்கும் நடைமுறை நேற்று தொடங்கியது. டோக்கன் கொடுக்கத் தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கின. காரணம், டோக்கன் பெற காத்திருந்த பலருக்கும், "லிஸ்ட்டில் உங்கள் பெயர் இல்லை.. பொங்கல் பரிசுத்தொகை உங்களுக்கு கிடைக்காது" எனச் சொல்லப்பட்டதுதான்.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும், பெண்கள், குடும்பத் தலைவிகள், பொங்கல் பரிசுத்தொகை டோக்கன் தங்களுக்கு கிடைக்காதது பற்றி குமுறி வருகின்றனர். திமுக அரசு மீதான அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் ரேஷன் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்தனை சிக்கல்களுக்கும் காரணம், தமிழக அரசு வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அறிவித்த நிபந்தனைகள் தான்.

லிஸ்ட்ல பெயர் இல்லை: வருமான வரி செலுத்துவோர், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா ரேஷன் அட்டைதாரர்கள் தவிர்த்து, மற்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

People are upset over dmk government for did not get Pongal gift Rs 1000 token

பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும், அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது தான் இதுவரை இருந்து வந்த வழக்கம். கடந்த 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் கொரோனா நோய்த் தொற்றால் மக்களுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டவும், பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடவும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.2,500 வழங்கப்பட்டது.

கடும் அதிருப்தி: அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் ரூ.2,500 போதாது 5,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அதே ஸ்டாலின் இன்றைக்கு, பொங்கல் பரிசாக ரூ.1000 மட்டுமே வழங்குவதாக அறிவித்துள்ளதோடு, அதற்கும் பல நிபந்தனைகளை விதித்து, பலருக்கும் கிடைக்க விடாமல் செய்து பெரும்பாலான பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதுதான் வேதனை.

கடந்த ஆண்டு கூட பொங்கல் பண்டிகையின்போது, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, அதன்படி அனைவருக்கும் ரூபாய் 1,000 வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றனர். பொங்கலுக்குள் இந்த பரிசுத்தொகையைப் பெற முடியாதவர்களுக்கு, பொங்கல் முடிந்த பிறகும் வழங்கப்பட்டது.

தமிழக அரசு வைத்த ட்விஸ்ட்: ஆனால், தற்போது, வருமான வரி செலுத்துபவர் யாரேனும் குடும்பத்தில் இருந்தால், அந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகை, ரேஷன் அரிசி வாங்கும் எல்லோருக்கும் தானே கிடைக்கும் என பொங்கல் பரிசு டோக்கன் வாங்க காலை முதல் காத்திருந்த மக்கள், தங்களுக்கு ரூ.1000 கிடைக்காது, லிஸ்ட்டில் பெயர் இல்லை எனச் சொல்லப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்தனர்.

ஏற்கனவே, திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகை, விண்ணப்பித்த பல லட்சக்கணக்கானோருக்கு கிடைக்கவில்லை. அவர்களில் பெரும்பாலானோருக்கு சொல்லப்பட்ட காரணம், "உங்கள் குடும்பத்தில் வருமான வரி செலுத்துபவர் உள்ளதால், உங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காது" என்பதுதான். ஆனால், பலர், அலுவலக நெருக்கடிகளின் காரணமாக, வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள் தான். வருமான வரி செலுத்துபவர்கள் அல்லர். மாதச் சம்பளம் வாங்கும் ஒருவர் வீட்டில் இருந்தாலே மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டது.

People are upset over dmk government for did not get Pongal gift Rs 1000 token

அதே காரணம் காட்டி மறுப்பு: இந்தச் சூழலில், மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் மறுக்கப்பட்டதோ, அவர்களுக்கு எல்லாம் பொங்கல் பரிசுத்தொகையும் அதே காரணத்தைக் காட்டி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான குடும்பத் தலைவிகள் திமுக அரசு மீது கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளனர். எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, இந்த புதிய நிபந்தனையை கொண்டு வந்தது ஏன் என்பதே பெரும்பாலானோரின் குமுறலாக உள்ளது.

டோக்கன் தங்களுக்கு கிடைக்காததால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள், ஆளுங்கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் அரசின் இந்த புதிய நிபந்தனை தலைவலியை உண்டாக்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியே பரவாயில்லை, பொங்கலுக்கு எல்லோருக்கும் ரூ.2,500 கொடுத்தார். ஆனால், இப்போது 1000 ரூபாயை கூட அனைவருக்கும் வழங்காமல் ஏமாற்றியுள்ளார் ஸ்டாலின் என்ற குரல்கள் வலுவாக ஒலித்துள்ளன.

முதல்வர் காதுக்குச் செல்லுமா?: வருமான வரி கட்டுவதை அரசு தான் விளம்பரம் செய்து ஊக்குவிக்கிறது. அப்படி இருக்கும்போது, எல்லா விதமான அரசின் திட்டங்களில் இருந்தும் வருமான வரி செலுத்துபவர்களை விலக்கி வைத்தால், வருமான வரி கட்டுபவர்களும், வரி கட்டுவதை தவிர்க்கத்தானே நினைப்பார்கள், இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எனவே தமிழக அரசு, இந்த விதிமுறையை நீக்கி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக் குரல்கள் வலுவாக எழுந்துள்ளன.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களின் இந்த அதிருப்தி, கடுமையாக எதிரொலிக்கக்கூடும் என்கிறார்கள் ஆளுங்கட்சியினரே. மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்கள் அனைவரும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் எனச் சொல்ல முடியாது, ஆனால், அரசால் தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் மக்கள் திமுகவுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள். மக்களின் இந்தக் குரல் முதல்வரைச் சென்று சேருமா என்பதுதான் பலரது எதிர்பார்ப்பும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+