சென்னையில் விடாது கொட்டிய கனமழை.. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர்.. அவதியடையும் பொதுமக்கள்!
சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் பெய்த கனமழையால் புரசைவாக்கம், ஓட்டேரி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. சில பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது நாளை தமிழகம்-புதுச்சேரி கடற்கரை இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக, இன்று முதல் 14ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் தொடர்ந்து அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைவிடாது பெய்த கனமழை
இதனிடையே நேற்றிரவு முதலே சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை, அடையாறு, மயிலாப்பூர், திருவான்மியூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், ஓட்டேரி உட்பட பல்வேறு இடங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது.

சாலைகளில் தேங்கிய மழைநீர்
இந்த கனமழை காரணமாக நகரின் 96 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புரசைவாக்கம், ஓட்டேரி, செங்குன்றம், புழல், மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், புரசைவாக்கம், டாணா தெரு, வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

சுரங்கப்பாதைகள் மூடல்
இதுமட்டுமல்லாமல் கனமழை காரணமாக தேங்கிய மழைநீரால் பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதைகள் மூடும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம், சூரப்பட்டு விநாயகப்புரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் வில்லிவாக்கம் பகுதிகளில் அதிகளவு மழைநீர் தேங்கியதால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனாம் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். வீட்டில் இருந்து வெளியில் வந்தாலே முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications