சென்னை பெரம்பூரில் மகளுடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்த வாலிபர்.. ஆத்திரப்பட்ட தந்தை.. விபரீதம்
சென்னை: சென்னை பெரம்பூர் செம்பியம் சக்கரபாணி தோட்டம் பகுதியில், மகளுடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்த ரமேஷ் என்பவரை கண்டதும் தந்தை கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர் தாக்கியதில் ரமேஷ் உயிரிழந்தார். மகளுடனான உறவை விட சொல்லி தந்தை சக்கரபாணி பலமுறை எச்சரித்தும் ரமேஷ் உறவைத் தொடர்ந்ததால் ஆத்திரத்தில் இந்த விபரீதம் நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பெரம்பூர் செம்பியம் சக்கரபாணி தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் (34). இவருக்குத் திருமணமாகி ஷர்மிளா என்ற மனைவி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுக்கும் ரமேஷுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, பெண்ணின் தந்தையான பாபு (53) என்பவர் ரமேஷை பலமுறை அழைத்து எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அவரது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் ரமேஷ் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாபு, சம்பவத்தன்று பெரம்பூர் சக்கரபாணி தோட்டம் பகுதியில் உள்ள ரமேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது ரமேஷிடம் மீண்டும் அந்தப் பெண்ணுடனான தொடர்பைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதற்கும் ரமேஷ் செவிசாய்க்காததால், ஆத்திரமடைந்த பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷை சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பியம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ரமேஷின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக போக்சோ வழக்கில் சிறையில் இருந்தவர் ரமேஷ்
இதற்கிடையே, உயிரிழந்த ரமேஷ் ஏற்கனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும், கடந்த ஜனவரி மாதம் வரை சிறையில் இருந்துவிட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரமேஷ்க்கு ஒரு மகன் உள்ளார் . ரமேஷின் மனைவி ஷர்மிளா, கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்து அவரைக் கண்டித்ததாகவும், இருப்பினும் ரமேஷ் அந்தத் தொடர்பைத் தொடர்ந்ததால் கணவரைப் பிரிந்து தனது தாயார் வீட்டிற்குச் சென்று வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை வழக்குப் பதிவு - பெண்ணின் தந்தை கைது
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக ரமேஷை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் பெண்ணின் தந்தை பாபு (53) என்பவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாபு, சென்னை திரு.வி.க. நகர் காமராஜர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பூர் செம்பியம் பகுதியில் திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் வாலிபர் வீட்டிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 2வது கொலை
சென்னை அபிராமபுரத்தில் முன் விரோதத்தால் நேற்று கத்தியால் வெட்டப்பட்ட சிவகுமார் (27) என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய லோகநாதன், வீரா, ராமு, அஜித் ஆகியோர் தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த நிலையில், போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.




Click it and Unblock the Notifications
