பிரபாகரனுக்கே வெடிகுண்டுகள் தயாரித்து அனுப்பி சிறை சென்ற பெரியாரிஸ்டுகள்- சீமானுக்கு தபெதிக பதிலடி!
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கே தமிழ்நாட்டின் கோவையில் வெடிகுண்டுகள் தயாரித்து சிறை தண்டனை பெற்றவர்கள்தான் பெரியார் தொண்டர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தந்தை பெரியார் திக ( Seeman Periyar Prabhakaran) பதிலடி தந்துள்ளது. தந்தை பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டுகளை வீசுவேன் என சீமான் பேசியதற்கு பதிலடியாக இந்த வரலாற்று தகவல்களை தபெதிக வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் இளங்கோ மணிவண்ணன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை. இராமகிருட்டிணன், மாநில அமைப்புச் செயலாளர் தடா ஆறுச்சாமி ஆகியோர், விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் தயாரித்த தடா வழக்கில் 31/2 ஆண்டுகள் சிறையில் இருந்தது பலருக்கு தெரிந்திருக்கும்.

அதற்கெல்லாம் முன்னரே, இதே போன்று ஒரு வழக்கில் கைதானவர் ஆறுச்சாமி. விடுதலைப் புலிகளுக்கு அளிப்பதற்காக, கோவையில் தனது ஆலையில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளை சாக்கு மூட்டையில் வேதாரண்யம் வழியாக ஈழம் எடுத்து செல்லவேண்டும் என்பது அவரது திட்டம்.
அப்படி எடுத்துச் செல்கையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மூட்டையில் இருந்து சில குண்டுகள் தவறி விழுந்துவிட்டன. அங்கே இருந்த ஒரு ராணுவ வீரர் அதைக் கண்டு, காவல்துறையிடம் புகார் அளித்துவிட்டார். இந்த வழக்கில் 6 மாதம் சிறையில் இருந்தார் ஆறுச்சாமி. இந்த கருப்பு வெள்ளை புகைப்படமே, அதெல்லாம் நடந்தது எந்தக் காலம் என்பதை உணர்த்தும்.
ஆம்... பிரபாகரனுக்கு வெடிகுண்டுகளை அனுப்பியவர்கள் தந்தை பெரியார் தி.க வினர், பெரியார் இயக்கத்தவர்கள் அதனால் அவர்கள் அடைந்த துன்பம் சொல்லிமாளாது. காரணம், அவர்கள் பெரியாரையும் பிரபாகரனையும் வேறாகப் பார்க்கவில்லை. பிரபாகரனும் அப்படிப் பார்க்கவில்லை. சீமான் பின் நிற்கும் இளைஞர்கள் பலர் உண்மையில் உணர்வுள்ளவர்களே... அவர்கள் இந்த புரட்சிகர வரலாற்றை அறிந்து கொள்ளவே இந்த பதிவு.. இவ்வாறு இளங்கோ மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு வீச்சு- சீமான் பேசியது என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த சீமான், நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு.. நான் உன் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன்.. என்ன நடக்கிறது என பார்.... ஏய்.. வெச்சிருக்கேன்.. இன்னும் வீசவில்லை.. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என பார்த்துக் கொள்.. உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது.. Be Carefull.. சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள்.. என எச்சரிக்கை விடுத்திருந்தார். சீமானின் இந்த மிரட்டலுக்கு தற்போது தந்தை பெரியார் திக பதிலடி தந்துள்ளது.












Click it and Unblock the Notifications