எப்படி இப்படி? ஷவர்மா சோதனையை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக பெரியாரிஸ்டுகள் செல்பி போராட்டம்
சென்னை: ஷவர்மா உணவகங்களில் தமிழக அரசு சோதனை நடத்துவதற்கு பெரியார் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஷவர்மா உணவகங்களில் சோதனை நடத்துவதற்கு எதிராக செல்பி போராட்டத்தையும் பெரியாரிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.
கேரளாவில் ஷவர்மா உணவை சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் ஷவர்மா சாப்பிட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ஷவர்மா உணவு மேலை நாட்டு உணவு மேலை நாட்டில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது. ஆனால் நமது நாட்டில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு உகந்த உணவு அல்ல. பழைய இறைச்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து வெந்தும் வேகாமல் தயார் செய்து கொடுப்பார்கள். நமது ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உணவாக ஷவர்மா இல்லாததால் மீதமான இறைச்சி கெட்டுப் போய் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளைக் கொண்டு சோதனை நடத்தப்படும். அங்கு போதிய கட்டமைப்பு வசதி உள்ளதா அல்லது பொதுமக்களுக்கு பழைய இறைச்சிகளை கெட்டுப்போன இறைச்சிகளை வழங்குகிறார்களா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்பொழுது தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..ஷவர்மா நமக்கான உணவு அல்ல நமது நாட்டில் எண்ணற்ற வகையான உணவுகள் உள்ளது. இது போன்ற வெளிநாட்டு உணவை தவிர்த்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் .

இதற்கு பெரியாரியஸ்டுகள் இயக்கமான காட்டாறு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காட்டாறு அமைப்பின் அதி அசுரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆய்வு செய்வதென்றால் அடையாறு ஆனந்தபவன், சரவணபவன், ஆரியபவன் போன்ற சைவ உணவகங்களிலும் சுகாதார ரீதியிலான ஆய்வுகளைச் செய்ய வேண்டும். இஸ்லாமியர்களின் உணவுமுறை என கருதப்படும் பிரியாணி, கிரில், ஷவர்மா கடைகளில் மட்டும் ஆய்வு செய்வது திராவிட மாடல் அரசின் செயலாக இருக்க முடியாது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் அறிவிப்பைக் கண்டிக்க விரும்புபவர்கள் உடனடியாக ஒரு ஷவர்மாவை வாங்கி குழந்தைகளுக்குக் கொடுத்து, ஒரு ஷவர்மா செல்ஃபியை வெளியிடுங்கள்! குழந்தைகள் இல்லாவிட்டால், அவரவர்களே ஷவர்மா, கிரில் செல்ஃபிகளை வெளியிடுங்கள்! இவ்வாறு அதிஅசுரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications