பட்டா நிலங்களுக்கு அனுமதி.. சர்வேயர்கள் கிளம்பி வர்றாங்க.. வக்பு சொத்துக்கள் நில அளவை.. அரசு அதிரடி
சென்னை: முறையாக அனுமதி பெற்று கட்டப்படும் வழிபாட்டு தலங்களுக்கு தடையாக இருக்கும் சக்திகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் உறுதி தெரிவித்துள்ளார்.. அத்துடன், தமிழகம் முழுதும் உள்ள வக்ப் சொத்துக்களின் நில அளவைப் பணிகளை விரைவுபடுத்த, கூடுதலாக, 20 நில அளவையர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் அமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.. குறிப்பாக "சென்னை, திருநெல்வேலி, கரூர், சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில், கூடுதலாக தலா ஒரு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், நெல்லை, விழுப்புரம், தஞ்சை மாவட்டங்களில், கூடுதலாக ஒரு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் துவங்கப்படும்
கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டம், கபர்ஸ்தான்களை சீரமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் சிறுபான்மை மாணவ - மாணவியர் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு படிக்க, கல்வி உதவித்தொகை வழங்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

சர்வேயர்கள் நியமனம்
புத்த, சமண, சீக்கிய மதத்தினர், அவரவர் புனித தலங்களுக்கு பயணம் செய்ய, ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு, 10,000 ரூபாய் வீதம், 120 பேருக்கு, 12 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.. அதேபோல, தமிழகம் முழுதும் உள்ள வக்ப் சொத்துக்களின் நில அளவை பணிகளை விரைவுபடுத்த, கூடுதலாக, 20 உரிமம் பெற்ற நில அளவையர்கள் நியமனம் செய்யப்படுவர். இதற்காக, 2.28 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பள்ளிவாசல், தர்காக்களை சீரமைக்க வழங்கப்படும் மானியம், 10 கோடி ரூபாயிலிருந்து, 15 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று மிக முக்கியமான அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
அதுமட்டுமல்ல, பேரவையில் நடைபெற்ற பொதுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள்..
கன்னியாகுமரி நிலம்
இதில், கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ்குமார் பேசும்போது, "தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் 10 சதவீதமும், இஸ்லாமியர்கள் 9 சதவீதமும் என ஏறக்குறைய 20 சதவீதம் பேர் மதச் சிறுபான்மையினராக உள்ளனர்.
தேவாலயங்கள், மசூதிகள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை. குறிப்பாக, கன்னியாகுமரியில் பட்டா நிலங்களில் மசூதிகள், தேவாலயங்கள் கட்ட அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை.. பட்டா நிலங்களில் விதிகளுக்கு உட்பட்டு வழிகாட்டு தலங்களை அமைக்க சிலர் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்" என்று கூறினார்.
பட்டா நிலங்கள்
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நாசர், "கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மதவழிபாட்டு தலங்களை கட்ட தடை ஏற்படுவதாக உறுப்பினர் தெரிவித்துள்ளார். பட்டா நிலங்களில் விதிகளுக்கு உட்பட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, விண்ணப்பித்து, அனுமதி பெற்று வழிபாட்டுத்தலம் அமைக்கலாம்.
அதாவது, அனைத்து மாவட்டங்களிலும் பட்டா நிலங்களில் மதவழிபாட்டு தலங்கள் அமைப்பதற்கான தடையில்லா சான்று, மதவழிபாட்டு தலங்கள் அமைக்கப்படும் இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் இருக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் மூலம் அரசு பொது சட்டம் மற்றும் ஒழுங்கு துறை மூலமாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி, வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
மேலும், மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டிடத்துக்கு அனுமதி பெற்று வழிபாட்டு தலங்களை அமைக்கலாம். இதற்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications