ஊழல்செய்தால் முதல்வர் பதவி..பாஜகவை வெளுத்த பீட்டர் அல்போன்ஸ்.. நாட்டுக்கே ஆபத்து.. எச்சரித்த ஷியாம்…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மே மாதம் ஜப்பான் சென்றபோது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இறுதியில் அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இப்போது பாஜகவுக்கு எதிரான கட்சிகள் கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் பெங்களூரு சென்றுள்ள நேரம் பார்த்து 17-7-23 அன்று அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. விடிய விடிய அவரை விசாரித்த அதிகாரிகள் 18-ஆம் தேதி மாலை மீண்டும் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமலாக்கத்துறையைத் தவறான முறையில் பாஜக பயன்படுத்தி வருவதாக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் குற்றம்சாட்டி வருகின்றன. ஆகவே, ED இன் நடவடிக்கை குறித்து பத்திரிகையாளர் ஷியாம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகிய இருவரிடமும் கருத்துக் கேட்டோம். அவர்கள் சொல்வது என்ன?

பீட்டர் அல்போன்ஸ், அரசியல் தலைவர்: "அமலாக்கத்துறை என்பது ஆள் தூக்கி துறையாக மாறி பல நாள்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு ஆள் பிடிக்கின்ற துறையாக மாறி இருக்கிறது. இன்றைக்கு அசாமில் பாஜகவைச் சேர்ந்தவர்தான் முதலமைச்சராக இருக்கிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோடியும் அமித்ஷாவும் அசாமுக்குச் சென்றபோது பிரசாரம் செய்தார்கள்.
'ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு ஊழல்வாதி. ஆட்சி மாறிய உடன் நாங்கள் இவர் மீது நடவடிக்கை' எடுப்போம் என்று பேசினார்கள். இதைப் பிரதமரும் சொன்னார். நம் உள்துறை அமைச்சரும் சொன்னார். இந்தத் தருணத்தில் ஹிமந்த் பிஸ்வா பாஜகவில் சேர்ந்துவிட்டார். அதன்பிறகு அவர் மீதான வழக்குகள் எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டன. இன்றைக்கு அவர் அசாம் முதல்வராக ஆகிவிட்டார்.
அடுத்து மகாராஷ்டிராவில் இருக்கும் அஜித் பவார். அவர் மீது 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்குகள் உள்ளதாகக் குற்றம்சாட்டினார்கள். குற்றம்சாட்டியவர் இன்றைக்குத் துணை முதலமைச்சராக இருக்கின்ற பட்னாவிஸ்.
இதைவிடப் பிரதமர் மோடியே மகாராஷ்டிரா மாநிலம் போனபோது 'இந்த அஜித் பவாரை கைது செய்து சிறையில் அடைப்போம். அவரை மட்டுமல்ல; அந்தக் குடும்பத்தையே சிறையில் அடைப்போம்' எனச் சொன்னார்.

70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்: அந்த 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாரிலே ஆயிரம் கோடி ரூபாய் அடையாளப்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. 152 கோடி ரூபாய் சொத்துகளை ஜப்தி செய்திருக்கிறார்கள்.
ஆனால், இவ்வளவும் முடிந்த பிறகு அஜித் பவார் பாஜக கூட்டணியில் சேர்வதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்ற வேளையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. அந்தக் குற்றப்பத்திரிகையில் அஜித் பவார் பெயரே சேர்க்கப்படவில்லை. அவரது மனைவியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இல்லை.
இதைப்போலவே மேற்குவங்க மாநிலத்திலே ஒரு சம்பவம். இங்கே சுவேந்து அதிகாரி என்று ஒருவர். இவர் மீதும் வருவாய்த்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடந்தது.
அவர் பாஜகவில் சேர்ந்தார். இப்போது எதிர்க்கட்சி தலைவராகிவிட்டார். ஆந்திர மாநிலம் ஜெகன் ரெட்டி மீது 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சிபிஐ விசாரணை. ஆனால், அந்த வழக்கு இப்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை.
நான் கேட்கிறேன், அப்போது பாஜகவில் சேர்ந்துவிட்டதால் இவர்கள் எல்லாம் புனிதர்கள் ஆகிவிட்டார்களா?
அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் இப்போது 13 ஆண்டுகளுக்கு முன்னால், பதியப்பட்ட ஒரு வழக்கை எடுத்துக் கொண்டுவருகிறார்கள். அந்த வழக்கையே முடித்துவைக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். அதற்குப் போய் இப்போது சோதனை நடத்தப்படுகிறது. இந்தச் சோதனையை மக்கள் ஒரு அரசியல் நகைச்சுவையாகவே பார்க்கிறார்கள்" என்கிறார்

தராசு ஷியாம், பத்திரிகையாளர்: இன்றைய சூழலை வைத்துப் பார்த்தால் இந்த அமலாக்கத்துறை ஐடி ரெய்டு திமுகவுக்கு அனுதாபத்தைத்தான் தேடித் தரும் என்று நினைக்கிறேன். இதை திமுக மீதான நெருக்குதல் மட்டுமே நான் பார்க்கவில்லை.
இதில் அதிமுக மீதாக ஒரு மறைமுக நெருக்கல் இருப்பதாகவே நான் பார்க்கிறேன். கடைசி நேரத்தில்தான் தேர்தல் கூட்டணியை உறுதி செய்வது அதிமுக நிலைப்பாடு. ஜெயலலிதா காலத்திலிருந்தே இதுதான் நிலை.
திமுக ஐடி ரெய்டை வைத்து அதிமுகவுக்கும் ஒரு அழுத்தம் கொடுக்கப்படுகிறது ஒன்றிய அரசு. பார்த்துக்கொள்ளுங்கள், சரியான சீட்டை ஒதுக்கவில்லை என்றால் உங்கள் வீட்டுக் கதவையும் நாங்கள் தட்டுவோம் என மறைமுகமாக பாஜக செய்தி சொல்கிறது.
எங்களுக்குப் பிடித்திருந்தால், உங்களைப் பிடிக்கமாட்டோம். எங்களுக்குப் பிடிக்காவிட்டால், உங்களை நாங்கள் பிடிப்போம்- இப்படிக்கு ED. இதானே நடந்து கொண்டிருக்கிறது.
அப்படி என்றால் இந்த ரெய்டு அனுதாபத்தைத்தானே ஏற்படுத்தும். நீதி என்பது சட்டத்தின் ஆட்சி. நியாயமான நடவடிக்கைகள். ஒவ்வொரு கட்டத்திலும் தொடர் நீதி காப்பாற்றப்பட வேண்டும். நீதி என்பது ஒரே நேரத்தில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு அடியிலும் நீதி காப்பாற்றப்பட வேண்டும். அப்படியான தொடர் நீதி இவர்களின் நடவடிக்கைகளில் உள்ளதா?
பொன்முடி வழக்கானது விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்தது. அது அமலாக்கத்துறை வழக்கே கிடையாது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்கு அது. அதற்கு 'குவாஷ்' கேட்டு பொன்முடி தரப்பு உயர்நீதி மன்றத்திற்குச் சென்றது. அங்கு வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது.

நாட்டிற்கே ஆபத்தான சட்டம்: ஆகவே தொடர்ந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடக்கின்றது. இந்த வழக்கில் ECIR (Enforcement Case Information Report) போட்டால்தானே ED உள்ளே வரமுடியும்? செந்தில் பாலாஜி வழக்கில் 2021 ECIR போடப்பட்டது. அது நன்றாகவே தெரியும். ஆனால் பொன்முடி வழக்கில் ECIR எப்போது போடப்பட்டது? இதற்கு எல்லாம் விடை இல்லை.
ஆகவேதான் சொல்கிறேன், நீதி என்பது தொடர்ந்து ஒவ்வொரு கட்டங்களிலும் காப்பாற்றப்பட வேண்டும். அப்படி இந்த விசயத்தில் காக்கப்பட்டு உள்ளதா? ஆகவே நாம் கருப்புச் சட்டங்களை நாம் எதிர்க்க வேண்டும். சட்டம் என்பது தொடர் நீதியைக் காப்பாற்றாவிட்டால், அது கருப்புச் சட்டம்.
Prevention of Money Laundering Act (PMLA) சட்டத்தில் மூன்று கூறுகள் அவசியமானவை. ஒன்று, Placement. இரண்டு, layer. மூன்று, integrate. அதாவது Placement என்றால் கருப்புப் பணம் அல்லது சட்டவிரோத பணம், குற்றப்பணம். இவை எல்லாம் அதில் வரும். ஒரு வழக்கில் Placement முடிந்து கடைசியாக integrate கட்டம் வரும்போது, நாட்டின் பொதுப் பொருளாதாரத்துடன் இணைத்தலின் போதுதான் அது Money Laundering ஆக மாறுகிறது.
இன்றைக்கு ED தான் புதிய சிபிஐ. நான் சொல்லவில்லை, பிரசாந்த் கிஷோர் உச்சநீதிமன்றத்தில் சொன்னது இது. முன்பு சிபிஐயை வைத்து என்ன செய்தார்களோ, அதையே இப்போது ED வைத்துச் செய்கிறார்கள். இதில் அதிகாரிகள் தவறு செய்தால், ஆட்சி மாறுகின்றபோது தண்டனை வாங்கித் தர Prevention of Money Laundering Act இடம் இருக்கிறது. மற்ற சட்டங்களில் அது கிடையாது.
எனவே PMLA என்ற சட்டமே கருப்புச் சட்டம். எளிதில் ஜாமீன் கிடைக்காது. ஆகவேதான் சொல்கிறேன், ஒரு ஜனநாயக நாட்டில் கருப்புச் சட்டம் என்பது ஆபத்தானது. அதனால்தான் இச்சட்டத்தை நான் எதிர்க்கிறேன்" என்கிறார்












Click it and Unblock the Notifications