பாஜக எதிர்ப்பு அரசியல் பத்தாது! தலைவர்கள் வாயே திறப்பதில்லை! சோனியாவிடம் பீட்டர் அல்போன்ஸ் ஆதங்கம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி பாஜகவை இன்னும் வீரியமோடு எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்றும் பாஜகவுக்கு எதிராக கீழ்மட்ட நிர்வாகிகளும், செய்தித் தொடர்பாளர்களும் தான் பேசுகிறோமே தவிர முக்கியத் தலைவர்கள் யாரும் வாயே திறப்பதில்லை எனவும் சோனியா காந்தியிடம் ஆதங்கம் தெரிவித்திருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.
திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்றிரவு சென்னை வந்த சோனியா காந்தி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இன்று காலை 11.30 மணிக்கு மேல் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசிய சோனியா காந்தி அவர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டு பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய ஈ.வி.கே.கே.எஸ். இளங்கோவன் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் மாநில தலைவரும், காங்கிரஸ் முக்கிய பிரமுகருமான பீட்டர் அல்போன்ஸ், பாஜகவுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் யாரும் பேசுவதே கிடையாது என குற்றஞ்சாட்டினார்.
கீழ்மட்ட நிர்வாகிகளும், செய்தித் தொடர்பாளர்களும் மட்டும் தான் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசுகிறோம் என்றும் ஏன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னணித் தலைவர்கள் பேசுவதே இல்லை எனவும் வறுத்தெடுத்தார். பீட்டர் அல்போன்ஸ் இப்படி பேச பேச அங்கிருந்த கங்கிரஸ் முன்னணி தலைவர்களின் முகம் வெளிரத் தொடங்கியது.
இருப்பின் தன்னை பற்றி யாரும் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என எண்ணாமல், தன்னிடம் யாரும் கோபித்துக் கொள்வார்கள் என நினைக்காமல் சொல்ல வந்த விஷயத்தை துணிச்சலாக சோனியா காந்தி முன்பு கூறினார். பீட்டல் அல்போன்ஸை போலவே சிடி மெய்யப்பன் என்பவரும் கட்சியின் நிலை பற்றிக் கவலை தெரிவித்தார்.
பீட்டர் அல்போன்ஸ் பேசிய விவகாரத்தை மிக சீரியஸாக குறிப்பெடுத்துக் கொண்ட சோனியா காந்தி, விரைவில் இது குறித்து கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல் காந்தி ஆகியோருடன் விவாதிப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications