பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு இபிஎஃப்ஓ மகிழ்ச்சியான செய்தி.. ஏப்ரலில் வரும் புதிய ஆஃப்
சென்னை: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎஃப் பணம் தொடர்பாக அதன் சந்தாதாரா்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி இபிஎஃப்ஓவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், அவசர தேவைக்கு பிஎஃப் பணத்தை எடுப்பது எளிதாகிறது. அவர்களுக்காகவே, யுபிஐ பணப் பரிவா்த்தனை மூலம் நேரடியாகத் தங்களின் வங்கி கணக்குகளுக்கே பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதன்படி யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதியுடன் கூடிய புதிய செயலி அறிமுகம் ஆகிறது.
இப்போது பிஎஃப் சந்தாதாரா்கள் பணம் எடுக்க வேண்டுமானால், 'யுஏஎன்' வலைதளம் அல்லது 'உமாங்' செயலி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த முறையில் பணம் கையில் வந்து சேர அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. 20 நாட்கள் குறைந்தது ஆகிறது. வெகுசிலருக்கே தானியங்கி முறையில் 3 நாள்களில் பணம் வழங்கப்படுகிறது.

தாமதம் ஏன்
இதற்கான வரம்பு அண்மையில்தான் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டிருக்கிறது. சுமாா் 8 கோடி உறுப்பினா்களைக் கொண்ட இபிஎஃப்ஓ அமைப்புக்கு, ஆண்டுக்கு 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் வருவதால் பணிச்சுமை அதிகமாகி, தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
யுபிஐ வசதி
இந்தப் பணிச்சுமையைக் குறைக்கவும், வங்கிகள் வழங்கும் அதிவேக சேவைக்கு இணையாக பிஎஃப் சேவையை மாற்றவும் இந்த யுபிஐ வசதி தற்போது அறிமுகம் ஆக உள்ளது. சந்தாதாரா்களின் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் நீண்ட கால சேமிப்புக்காக முடக்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகையை, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ மூலம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் வசதி ஏப்ரல் முதல் வருகிறது.
ரகசிய குறியீட்டு எண்
சந்தாதாரர்கள் யு.பி.ஐ. மூலம் தங்கள் பணத்தை வங்கிக்கணக்குக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதேபோல் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் விகிதம் ஆகியவற்றையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும் . இந்த பரிவர்த்தனை அனைத்தும் பாதுகாப்பாக முடிப்பதற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் ரகசிய யு.பி.ஐ. குறியீட்டு எண்ணை (பின்) பயன்படுத்திக்கொள்ள வழிவகையும் செய்யப்பட்டிருக்கிறது.
வங்கி போல் பயன்படுத்த முடியாது
இந்தப் புதிய செயலி மூலம் பணம் எடுப்பது மட்டுமின்றி, வங்கிச் செயலிகளைப் போலவே உங்கள் கணக்கில் உள்ள இருப்புத்தொகையைச் சரிபாா்ப்பது உள்ளிட்ட மற்ற சேவைகளை நீங்கள் பெறலாம். எனினும் இபிஎஃப்ஓ அமைப்பு வங்கி உரிமம் பெறாத காரணத்தால் நேரடியாக பணத்தை வழங்க முடியாது.எனவே பயனாளா்களின் வங்கி கணக்குகள் மூலம் இந்த யுபிஐ பரிவா்த்தனை செயல்படுத்தப்பட உள்ளது.
100 மாதிரி கணக்குகள்
இந்தப் புதிய சேவையில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, தற்போது 100 மாதிரி கணக்குகளைக் கொண்டு இபிஎஃப்ஓ தீவிரமாகச் சோதனை செய்து வருகிறது. இந்தச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன், வரும் ஏப்ரல் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications