"அம்பலம்!" சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு நடந்த குழந்தை திருமணம்.. வெளியான புகைப்படங்கள்
சென்னை: சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தை திருமணம் என்பது பொய்யான குற்றச்சாட்டு என்று தமிழ்நாடு ஆளுநர் கூறியிருந்த நிலையில், இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் செயலாளராக உள்ளவர் தனது மகளுக்குக் குழந்தை திருமணம் செய்து வைத்ததாகப் புகார் எழுந்தது. கடந்தாண்டு இவர் தனது மகளுக்கு 13 வயதிலேயே திருமணம் செய்து வைத்ததாகப் புகார் எழுந்தது.

கடந்த ஆண்டு 15 வயது சிறுவனுடன் அச்சிறுமிக்குத் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் கடந்தாண்டு நடந்தாலும் இந்தாண்டு தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
சிறுமியைத் திருமணம் செய்து வைத்த குற்றச்சாட்டில் ராஜரத்தின தீட்சிதர் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், திருமணத்தை நடத்தி வைத்த குற்றச்சாட்டில் அந்த சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்தச் சம்பவத்தில் திருமண மண்டபத்தில் இருந்த பதிவுகளையும் போலீசார் ஆதாரமாக முதலில் சேகரித்தனர். இப்படி மொத்தம் 4 குழந்தை திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களில் ஒன்றாக இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் அங்குள்ள தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், அங்கே நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாக அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகிறது. அதில் இந்த குழந்தை திருமண சர்ச்சை தான் மிகப் பெரியளவில் பேசுபொருள் ஆனது.
இது குறித்து சமூக நலத்துறையின் ஊர் நலத்துறை அலுவலர் சித்ரா அளித்த புகாரின் அடிப்படையில் கடலூர் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர். திருமணத்தை நடத்தி வைத்த தீட்சிதர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்தாண்டு தொடக்கத்தில் நடந்த இந்த திருமணம் குறித்தே முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த செப். மாதமும் குழந்தை திருமணம் நடந்ததாகப் புகார் எழுந்தது. அதில் இரு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஆளுநர் ரவி அளித்த பேட்டியில் இது குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதாவது, "தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் வைத்தனர். இப்படி மொத்தம் 8 புகார்களை முன்வைத்தனர். ஆனால் அங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை.

இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அப்படியிருக்கும் போது அவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, 'இரண்டு விரல் பரிசோதனை நடத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்து சிலர் தற்கொலைக்கும் முயன்றனர். இது குறித்து நானே முதல்வருக்கும் கடிதம் எழுதினேன்" என்றார்.
அதாவது சிதம்பரத்தில் எந்தவொரு குழந்தை திருமணமும் நடக்கவே இல்லை என்று ஆளுநர் கூறியிருந்தார். போலீஸ் மிரட்டல் காரணமாகவே தீட்சிதர்கள் ஒப்புக் கொண்டதாகக் கூறியிருந்தார். இதற்கிடையே கடந்தாண்டு நடந்த குழந்தை திருமணம் குறித்த புகார்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. திருமண நாளில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் குழந்தை திருமணம் நடந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications