டேக் ஆஃப் ஆகாத கூட்டணி..சீட்டைக் கலைத்து போட்ட அமித் ஷா! சென்னை வரும் கோயல்! பாஜகவுக்கு பிரேக் த்ரூ?
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருகை, அதிமுக - பாஜக கூட்டணிக்கான முக்கிய திருப்புமுனையாக அமையலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதுவரை அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக தொடங்கப்படவில்லை. ஆனால் பியூஷ் கோயல் வருகையின் போது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டு, கூட்டணியின் அடிப்படை வடிவம் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, எத்தனை தொகுதிகளில் எந்த கட்சி போட்டியிடும் என்பதில் தொடக்க கட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், அவரது வருகை தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டப்பேரவை தேர்தல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்கூட்டியே தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, சமூக வாக்காளர்களை குறிவைக்கும் திட்டங்கள் என அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
என்.டி.ஏ கூட்டணி
இந்த நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் சூழலில், அதிமுக - பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் உறுதியான முடிவை எட்டாத நிலையிலேயே உள்ளது. கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பாஜக கூட்டணி
கூட்டணிக்குள் நிலவும் சிக்கல்கள் இந்த பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கி வருகின்றன. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர், கடந்த தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், அவர்களை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான பேச்சுவார்த்தைகள் இதுவரை இறுதி முடிவை எட்டவில்லை.
பாமக விவகாரம்
அதேபோல், பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான கருத்து வேறுபாடுகள், கூட்டணி முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தேமுதிகவும் தனது கூட்டணி நிலைப்பாட்டை வருகிற ஜனவரி மாதத்தில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் முழுமையாகவில்லை.
பாஜக தேர்தல் பொறுப்பாளர்
இந்தச் சூழ்நிலையில்தான், கூட்டணி விவகாரங்களை கையாள அனுபவம் வாய்ந்த தலைவர் என்ற அடிப்படையில் பியூஷ் கோயலுக்கு தமிழக தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் சென்னை வரும் போது, முதற்கட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டம்
இதனிடையே, இன்று (டிசம்பர் 17) சென்னையில் தனியார் ஹோட்டலில் பாஜக சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றஇதில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் பணிகள், மேலிட தலைவர்கள் தமிழக வருகை மற்றும் கூட்டணி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதத்தில் தமிழகம் வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள குழப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டு, கூட்டணியின் இறுதி வடிவம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications