வேலுமணியை சந்தித்த பியூஷ் கோயல்? ரகசிய சந்திப்பு ஏன்? கே.சி. பழனிசாமி சொல்கிறார்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பு சம்பந்தமாக எஸ்.பி.வேலுமணி பெங்களூருவில் வைத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை ரகசியமாகச் சந்தித்ததாக கே.சி. பழனிசாமி ஒரு புதிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட முள் படுக்கை மீது படுத்துக் கொண்டிருக்கிறார் என்றே பலர் சொல்கிறார்கள். அதிமுக தலைமை யார் கைப்பற்றுவார்கள் என்ற பதவி சண்டையைச் சமாளிப்பதா? அல்லது தனக்கு எதிராக ஒன்று கூடியுள்ள சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என அணியைச் சமாளிப்பதா? அல்லது உட்கட்சிக்குள் தனக்கு எதிராகக் கிளம்பியுள்ள மாஜி அமைச்சர்களை சமாளிப்பதா? இவை போதாது என்று தினந்தோறும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமாளிப்பதா? ஒரு மனிதர் எத்தனை எதிர்ப்புகளைத்தான் ஒரே நேரத்தில் சமாளிப்பது?

இதனிடையே செல்லூர் ராஜு தொடர்பான ஆடியோ வெளியாகி அது ஒரு பக்கம் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறது. அது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகிறது. இவர் கூவிக்கூவி அழைத்தோம் என்று சொன்ன வார்த்தையை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சீமானுக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி தரக்குறைவாகப் பேசி இருக்கும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் பற்றி பேசி இருக்கும் கே.சி. பழனிசாமி, "ஒட்டு மொத்த பெண்களையே மானபங்கம் செய்துள்ளார் சீமான். அதை எப்படி ஒரு உண்மையான அதிமுக தொண்டனாக என்னால் ஏற்க முடியும் சொல்லுங்கள்? இதுவரை எடப்பாடி பழனிசாமி குறைந்த பட்சம் சீமானைக் கண்டித்து அறிக்கைக் கூடவிடவில்லை. இவரா அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த போகிறார். அதற்கான தகுதி உள்ள தலைவரா எடப்பாடி?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் திமுகவுக்கு விழுந்துள்ளதாக வரும் செய்தி பற்றி தொடர்ந்து பதிலளித்த அவர், "அதிமுக வாக்குகள் திமுகவுக்குப் போனதாகச் சொல்கிறார்கள். திராவிடமா? இந்துத்துவா? என்றால் அதிமுக தொண்டர்கள் திராவிடத்தின் பக்கம்தான் நிற்பார்கள். ஆகவே, பாஜக கூட்டணியை எதிர்த்து அதிமுக தொண்டர்கள் திமுகவை ஆதரித்திருக்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பு இல்லை. அதைத்தாண்டி இன்னொரு விசயம் சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமியே திமுகவுடன் மறைமுக கூட்டணியில் தான் இருக்கிறார்.
கடந்த தேர்தலில் ஸ்டாலின் என்ன சொன்னார்? 90 நாளில் மாஜி அமைச்சர்களின் ஊழல் விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று சொன்னாரா இல்லையா? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது? ஆகவே ஆட்சிக்கு வந்தது விசாரணை செய்து உண்மை குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று சொன்னாரா இல்லையா? ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்திய ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கைக் கொடுத்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் 6 மாதத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? ஆனால், அறிக்கை கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே எடப்பாடி பழனிசாமிக்கும் திமுகவுக்கு இடையில் 'ஸ்வீட் பாக்ஸ்' புரிதல் இருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். அது பாய்ந்து வருகிறது. விக்கிரவாண்டியிலும் அந்தப் புரிதல் இருக்கிறது. எனவேதான் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது 44% வாக்குகளைக் கட்சி பெற்றது. இப்போது 20% தான் எடப்பாடி பெற்றுள்ளார். மீதி 24% வாக்குகளை இழந்துள்ளது பற்றி அவர் கவலைப்படவில்லை.
ஆகவேதான் பெங்களூரூவில் பியூஷ் கோயலை வேலுமணி வைத்துச் சந்தித்துள்ளார். அப்போது அதிமுக இணைப்பு பற்றிப் பேசப்பட்டுள்ளது. அதைத்தான் எடப்பாடியிடம் வேலுமணி எடுத்துக் கூறியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. 2026 கூட்டணி ஆட்சி என்று அண்ணாமலை சொல்கிறார். ஆகவே, அதிமுகவுடன் இணைந்து ஒரு துணை முதல்வர் பதவியையாவது பெறலாம் என பாஜக கணக்குப் போடுகிறது.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமைக்கு வந்த பிறகு தொடர் தோல்விகளைத்தான் கட்சிக்குப் பெற்றுத் தந்துள்ளார். ஒரு வெற்றியைக் கூடப் பெற்றுத் தரவில்லை. இப்படியே போனால் பாஜக கூட்டணி மந்திரி சபை என்று பேசுவது உண்மையாகிவிடும். ஆகவே, ஒன்றுபட்ட அதிமுக நிச்சயம் தேவை. ஒபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் பொதுக்குழுவால் நீக்கப்பட்டார்கள். ஆனால், இவர்கள் இல்லாமல் ஒரு லட்சம் பேரை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி இருக்கிறார். அவர்கள் மீண்டும் கட்சிக்கு வரவேண்டும். அதை எடப்பாடி அறிவிப்பாரா?
எம்.ஜி.ஆருடன் பயணித்தவன் நான். அவர் காலத்திலிருந்து என்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்கள் கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா சொன்னார். இன்று எடப்பாடிக்கு சசிகலா எதிரி. ஓபிஎஸ்க்கு எடப்பாடி எதிரி. கட்சியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இன்று தெரிகிறார்கள். நான் எடப்பாடி கெட்டவர், ஓபிஎஸ் நல்லவர் என்று சொல்லவில்லை.
எடப்பாடி போல் இல்லாமல் சிரித்துக் கொண்டே கழுத்தை அறுப்பவர் ஓபிஎஸ். இன்னொரு அம்மா இருக்கிறார். அவர் நான் தான் பொதுச்செயலாளர் என்று அவரைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் இயக்கம் ஒன்றிணைய வேண்டும் என நான் நினைக்கிறேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர் சொன்னதைப் போல அதிமுக நூறாண்டுகள் இருக்கும்" என்கிறார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications