பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 5) தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்பட இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வை மாணவர்கள் எழுதவுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதவுள்ளனர்.
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை மாணவர்கள் எழுதுவதற்காக 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளைச் சேர்ந்த 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதைத்தொடர்ந்து, பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்கியது. தேர்வின் முதல் நாளான இன்று தமிழ் உள்பட இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. இன்று முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வும் 2 முதல் 4 நாட்கள் இடைவெளியில் நடைபெறவுள்ளது.
பிளஸ் 1 பொதுத் தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளைத் சேர்ந்த 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 பேர் எழுதவுள்ளனர். இதில், 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் ஆவர். மேலும், தனித்தேர்வர்கள் 4 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 137 பேரும் பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் 4 ஆயிரத்து 470 பறக்கும் படைகளும், தேர்வுப் பணிகளில் 44 ஆயிரத்து 236 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடவுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications