வாட்ஸ்-அப் மூலம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு அலகுத் தேர்வு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
சென்னை: பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

தேர்வுகள் ரத்து
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. மே 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறவிருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு அ.தி.மு.க ஆட்சியில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கும்
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வி அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுமே தவிர ஒரு போதும் ரத்து செய்யப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மாதிரி அலகு தேர்வு
இந்த நிலையில் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-

வாட்ஸ் அப் குழு
* வாட்ஸ் அப்-பில் மாணவிகளுக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் குழு ஏற்படுத்த வேண்டும்.
* இந்த வாட்ஸ் அப் குழுவில் தனித்தனியாக வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.
* மாணவ, மாணவிகள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனி தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, பின் அதை படம் பிடித்து, PDF ஆக மாற்றி அனுப்ப வேண்டும்.

ஆசிரியர்கள் திருத்துவார்கள்
* விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
* இந்த வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக் கூடாது.
* ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.












Click it and Unblock the Notifications